×

பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே பதவி விலகினார்: இங்கிலாந்தில் பரபரப்பு

லண்டன்: பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணமாக, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது பதவியில் இருந்து நேற்று அதிகாரபூர்வமாக விலகினார். ஆனால், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பொறுப்பு பிரதமராக செயல்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்காக கடந்த 2016ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில், பெரும்பாலான மக்கள் விலகுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, பிரக்சிட்டுக்கு எதிராக பிரசாரம் செய்த அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் தெரசா மே, புதிய பிரதமராக பொறுப்பேற்றார். பிரக்சிட் செயல் திட்டத்தை நிறைவேற்ற தெரசா மே கடுமையாக முயற்சித்தார்.

ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தக உறவு குறித்து அவர் அந்த அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்த போது, 3 முறை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான காலக்கெடு கடந்த மார்ச் 29ம் தேதி நிறைவடைந்ததைத் தொடந்து, அதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12, அக்டோபர் 31 என மேலும் இருமுறை நீட்டிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட தொடர் தோல்வியால், பிரதமர் பதவியில் இருந்து வரும் ஜூன் 7ம் தேதி விலகுவதாக தெரசா மே அறிவித்தார். இது குறித்து நேற்று பேசிய தெரசா மே, ``எனது பதவி விலகலுக்குப் பிறகு, அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்கும் வரை இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பேன். எனினும், பிரக்சிட் நடவடிக்கைக்கு எம்பி.க்களின் ஆதரவைப் பெற முடியாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எனக்குப் பிறகு பொறுப்பேற்கும் புதிய பிரதமராவது, பொது வாக்கெடுப்பில் மக்கள் அளித்த தீர்ப்பின்படி பிரக்சிட் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு புதிய பிரதமர் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்றாக வேண்டும்,’’ என்றார்.

இதையடுத்து, வரும் திங்கள்கிழமை 1922 டோரி கமிட்டி எனப்படும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்கள் கமிட்டி முன்னிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை 11 பேர் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், காமன்வெல்த் மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான செயலர் போரிஸ் ஜான்சன் முன்னணியில் இருக்கிறார். இவர் தவிர இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜெரெமி ஹண்ட், சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் கோவ் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

வேட்புமனு தாக்கல்

பிரதமர் பதவிக்கான வேட்புமனுக்கள் தாக்கல், 10ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அதன் பின், அரைமணி நேரத்தில் அதாவது மாலை 5.30 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய விதிகளின்படி, ஒரு போட்டியாளருக்கு 8 எம்பி.க்களின் ஆதரவு தேவை. இதற்கான ரகசிய வாக்கெடுப்பு வரும் ஜூன் 13, 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 20ம் தேதிக்குள் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் ஜூலை 22ம் தேதி யார் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படும். அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்பார்.

Tags : Teresa May , Theresa May
× RELATED பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து...