×

தெலங்கானாவில் 12 காங். எம்எல்ஏ.க்கள் கட்சித் தாவியது ஏன்? டிஆர்எஸ் விளக்கம்

ஐதராபாத்: ‘தெலங்கானாவில் தங்களின் அரசியல் எதிர்காலம் கருதியே காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 12 பேர் ஆளும் கட்சியில் இணைந்துள்ளனர்’ என தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கூறியுள்ளது. தெலங்கானாவில்  கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 119 இடங்களில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) 88  இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன் தலைவர் சந்திரசேகர ராவ், தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். காங்கிரஸ் 19  இடங்களில் வென்றது. இதில், 11 எம்எல்ஏ.க்கள் டிஆர்எஸ்.சில் சேரப் போவதாக  கடந்த மார்ச் 11ம் தேதி அறிவித்தனர்.தெலங்கானா  மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த உத்தம் குமார் ரெட்டி, மக்களவை தேர்தலில்  நலகொண்டா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனால், இவர் தனது எம்எல்ஏ  பதவியை கடந்த புதன்கிழமை ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பலம் 18 ஆக  குறைந்தது.

இந்நிலையில்,  காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 12 பேர், தங்களை டிஆர்எஸ் கட்சியில் இணைக்கும்படி சபாநாயகர் சீனிவாஸ் ரெட்டியிடம் நேற்று மனு அளித்தனர். ஒரு  கட்சியில் 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏ.க்கள் வேறொரு கட்சியுடன் இணைய  விரும்பினால், அவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  முடியாது.  இதனால், அவர்களின் கோரிக்கையை  ஏற்ற சபாநாயகர், அவர்களை டிஆர்எஸ் எம்எல்ஏ.க்களாக அங்கீகரித்தார். இதனால், காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும், சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 6 ஆக குறைந்துள்ளது. இது குறித்து உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், ‘‘பண பலம், பிளாக் மெயில் மூலம் எங்கள் எம்.எல்.ஏக்களை டிஆர்எஸ் இழுத்துள்ளது,’’ என குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த டிஆர்எஸ் செய்தி தொடர்பாளர் அபித் ரசூல் கான், ‘‘இது காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது.

சொந்த எம்.எல்.ஏ.க்களைக் கூட அவர்களால் தக்கவைக்க முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் பள்ளிக் குழந்தைகள் அல்ல. மக்கள் நலன், சிறந்த நிர்வாகம் ஆகியவை காரணமாக டிஆர்எஸ் கட்சியில் இணைவதாக அவர்களே பேட்டி அளித்துள்ளனர். தலைமை இல்லாமல், திசை தெரியாமல் காங்கிரஸ் கட்சி திண்டாடுகிறது. மாநிலத்தில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் இதே நிலைதான். தங்களின் அரசியல் எதிர்காலம் கருதியே 12 எம்எல்ஏ.க்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவர்களை நாங்கள் விலைக்கு வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்,’’ என்றார்.



Tags : Telangana ,party ,TRS , Telangana, Congress MLA, TRS
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து