×

2026ம் ஆண்டுக்குள் 40 சதவீத டாக்சிகளை மின்சார வாகனங்களாக மாற்ற திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பரிந்துரை

புதுடெல்லி: டாக்சி இயக்கும் நிறுவனங்கள், 2026ம் ஆண்டுக்குள் தங்களிடம் உள்ள வாகனங்களில் 40 சதவீதத்தை மின்னணு வாகனங்களாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக மின்சார வாகனங்களுக்கு டாக்சிகள் மாறவேண்டி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலில்தான் இயங்குகின்றன. இதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. இதற்காக கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யவேண்டி உள்ளது. இதனால், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாறுகின்றன. அதோடு, இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு அதிகமாகிறது.  எனவே, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகன உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

ஆனால் இவற்றுக்கான உற்பத்தி செலவு அதிகம் என்பதோடு, பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான மையங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லவே இல்லை. இதனால் மின்சார வாகனங்களை வாங்க யாரும் முன்வருவதில்லை.
இருப்பினும், முதல் கட்ட நடவடிக்கையாக, டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள கார்களில் 40 சதவீதத்தை மின்சார வாகனமாக மாற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:  நிதி ஆயோக் அதிகாரிகள் மற்றும் சாலை போக்குவரத்து, எரிசக்தி, ஸ்டீல் துறை அமைச்சகங்கள் இடையே ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28ம் தேதி நடந்தது. இதில், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கு விற்கப்படும் புதிய வாகனங்கள் கண்டிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாகத்தான் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 2023ம் ஆண்டில் இருந்து, மின்சாரத்தில் இயங்கும் பைக், ஸ்கூட்டர்களை விற்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வாகனங்களில் 2021ம் ஆண்டு 2.5 சதவீத வாகனங்களையும்,, 2022ல் 5 சதவீதம், 2023ல் 10 சதவீதம் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டியிருக்கும் என்றனர்.
சில டாக்சி நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இயக்கி வருகின்றன. ஆனால் அவற்றுக்கான கடந்த நிதியாண்டில் மின்சார வாகன விற்பனை 3 மடங்கு அதிகரித்து 3,600 ஆக இருந்தது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களோடு ஒப்பிடுகையில் இது 0.1 சதவீதம்தான். அதேநேரத்தில், சீனாவில் மின்சார வாகன பயன்பாடு 62 சதவீதம் உயர்ந்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தாத வரை இந்த திட்டம் வெற்றிகரமாக அமைய வாய்ப்பில்லை என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags : meeting , 40 percent taxis, electric vehicles, finance ayokh meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...