×

தர்மபுரி அருகே விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த வங்கி ஊழியர் மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: பைக்கில் தப்பிய 3 பேருக்கு வலை

தர்மபுரி: பாலக்கோடு அருகே வயலில் காவலுக்கு இருந்த வங்கி ஊழியர் மீது நள்ளிரவில், 3பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சென்னம்பட்டி கடுக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர்(31). இவர் அதேபகுதியில் உள்ள தனியார் வங்கியில், கஸ்டமர் ரிலேஷன் ஆபீசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 3வயதில் மகள் உள்ளார். சேகருக்கு சொந்தமாக விவசாய நிலம் வீட்டின் அருகிலேயே உள்ளது. இந்த நிலத்தில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலத்துக்கு கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் 3 பேர் வந்து சென்றுள்ளனர். இதனால், நேற்று முன்தினம் சேகர் தனது நிலத்தில் படுத்திருந்தார்.  அதிகாலை 2 மணியளவில் 3 பேர் அங்கு வந்துள்ளனர். இதனை பார்த்த சேகர், சத்தம் போட்டப்படி அந்த கும்பலை நோக்கி சென்றார். அப்போது 3 பேரும் அங்கு நிறுத்தி வைத்திருந்த டூவீலரில் ஏறி தப்பினர். அதே பகுதியில் சேகரும் டூவீலரை நிறுத்தி வைத்திருந்தார்.

தனது டூவீலரில் சேகரும் சத்தம் போட்ட படியே கும்பலை துரத்திச்சென்றார். பாப்பாரப்பட்டி அருகே சென்றபோது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சேகரை நோக்கி சுட்டுள்ளார்.  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் உடனடியாக, டூவீலரை திருப்பிக்கொண்டு தப்பிக்க முயன்றார். ஆனால் சேகரின் முதுகுக்குகீழ் குண்டு பாய்ந்தது. காயமடைந்த சேகர் கீழே விழுந்தார். எனினும் அந்த கும்பல் தப்பிச்சென்றது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சேகரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த கும்பல் நாட்டு துப்பாக்கி மூலம் சேகரை சுட்டுள்ளது தெரியவந்துள்ளது.  

இதுகுறித்து சேகர் கூறுகையில், எனது வீட்டிற்கும் தோட்டத்திற்கும் 250 மீட்டர் தொலைவு இருக்கும். எங்களது வீட்டில் இருந்தே தோட்டத்தை காவல் பார்த்துக்கொள்ளலாம். 3 நாட்களாக சந்தேகப்படும்படி, 3 நபர்கள் தோட்டத்தில் சுற்றி வந்தனர். அவர்கள் மீது டார்ச்லைட்டை அடித்தேன். அப்போது 3 பேரும் தப்பிச் சென்று, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் தப்பி சென்றனர். அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றபோது, என்னை சுட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர் என்றார்.

Tags : bank employee ,Dharmapuri ,farm land , Dharmapuri, agriculture, police, bank employee, gunfire
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்