×

நிர்வாக காரணங்களுக்காக செய்யப்படும் இடமாறுதலை எதிர்க்கும் மனுவை ஊக்குவிக்கக்கூடாது: எட்டரை ஆண்டுக்கு முன் மாற்றப்பட்ட இடத்தில் பணியில் சேர உத்தரவு

மதுரை: நிர்வாக காரணங்களுக்கான இடமாறுதலை எதிர்க்கும் மனுக்களை ஊக்குவிக்கக்கூடாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, எட்டரை ஆண்டுக்கு முன் மாற்றப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தேனியை சேர்ந்த திருமலைக்குமாரசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2011ல் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்ட நூலகத்தில் இளநிலை உதவியாளராக கடந்த 1998ல் பணியில் சேர்ந்தேன். 2007ல் உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன். என்னை சென்னைக்கு இடமாறுதல் செய்து பொது நூலகத்துறை இயக்குனர் கடந்த 10.12.2010ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனு மீதான விசாரணையில் இடமாறுதலுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காகவே இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்று, கடந்த எட்டரை ஆண்டுகளாக தேனியிலேயே  பணியாற்றுகிறார். இடமாறுதல் என்பது பணி விதிகளில் ஒன்றாகும். இடமாறுதல் செய்யப்படும் இடத்தை சம்பந்தப்பட்ட ஊழியரால் முடிவு செய்ய முடியாது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே இடமாறுதலை எதிர்க்க முடியும். இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது, நீதித்துறையினரின் ஆய்வு சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருக்க வேண்டும்.

நிர்வாக காரணங்களுக்கான இடமாறுதலில் நீதிமன்றம் தலையிட்டால் நிர்வாகப் பணிகள் பாதிக்கும். எனவே, நிர்வாக காரணங்களுக்கான இடமாறுதல்களை எதிர்க்கும் வழக்குகளை ஐகோர்ட் ஊக்குவிக்கக்கூடாது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர், இடைக்கால தடை பெற்று எட்டரை ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுகிறார். மனுதாரர், ‘தனது இடமாறுதல், நூலக ஆணைய சட்டத்துக்கு எதிரானது’ என்கிறார். ஆனால் வழக்கம்போல மற்ற அரசு ஊழியர்களுக்கான சலுகையை அனுபவிக்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரர் ஏற்கனவே இடமாறுதல் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டும். அங்கு பணியிடம் காலியாக இல்லாவிட்டால் மனுதாரரை வேறு இடத்துக்கு 4 வாரத்தில் இடமாறுதல் செய்ய வேண்டும்.

இடைக்கால தடையை நீக்கக் கோரி, நூலகத்துறை சார்பில் கடந்த 2012ல் மனு செய்துள்ளனர். இதற்கு வழக்கு எண் வழங்கப்பட்டும் கடந்த 7 ஆண்டில் ஒரு முறை முறை கூட விசாரணைக்கு வரவில்லை. இடைக்காலத் தடையை நீக்கக்கோரும் மனுக்களை 2 வாரத்தில் பரிசீலித்து, முறையாக இல்லாவிட்டால் திரும்ப வழங்க வேண்டும். தடையை நீக்கக்கோரும் மனுக்களை வழக்கு எண் வழங்கப்பட்டதில் இருந்து 2 வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். 2 வாரத்தில் தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடாத ஐகோர்ட் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இதை அனைத்து அதிகாரிகளும் பின்பற்றுமாறு ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனாலும் இந்த உத்தரவை ஐகோர்ட் பதிவுத்துறை பின்பற்றவில்லை. நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனையானது. தடையை நீக்கக் கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து ஐகோர்ட் மற்றும் பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவுகளை ஐகோர்ட் கிளை பதிவுத்துறை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Tags : applicant ,place ,anniversary , Hierarchy, paradigm, administrative reasons
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...