×

தனியார் ஆலைக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகை: கோபிசெட்டிப்பாளையத்தில் பரபரப்பு

கோபி: தமிழகமெங்கும்  தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம்  பாதிக்கப்பட்டுள்ளதால் குடிநீருக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.  கிராம மக்கள் பல கிமீ தூரம் பயணித்து தண்ணீரை பிடித்து வருகின்றனர்.  குடிநீரை சீராக விநியோகிக்கக்கோரி போராட்டங்கள் வலுத்து  வருகின்றன. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கோபியில் மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது, கலிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், `சின்னகுளத்தில் பொது இடத்தில் கிணறு அமைத்து அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் நடக்கிறது.

இதனால், எங்கள் ஊராட்சியில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். எனவே தனியார் ஆலைக்கு தண்ணீர் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றுகூறி முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் செங்கோட்டையன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதற்கிடையே கிராம மக்கள் ஒன்று திரண்டு கிணற்றை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலகம் முற்றுகை:  வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருவலம் பேரூராட்சி 4-வது வார்டு மேட்டுபாளையம் 1-வது தெரு பகுதியில் 700 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வீட்டுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சில நாட்களாக குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று காலை சுமார் 11 மணியளவில் சுமார் 50 பேர் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் இல்லாததால் கலைந்து சென்றனர். திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் ஊராட்சியை சேர்ந்த 100 பெண்கள் நேற்று காலை 11 மணிக்கு திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.  இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தெற்குரதவீதி-மேலரதவீதி சந்திப்பிலும் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து வத்திராயிருப்பிலும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.



Tags : Minister Ringtone Siege ,factory ,Gopichettipalayam , Private factory, Water, Minister, Sengottaiyan, Siege, Gobichettipalayam,
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...