சிறப்பு திட்டத்தில் அதிக நிதி வழங்கப்பட்டது: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது முடிந்த அத்தியாயம்: மாநில பாஜ தலைவர் பேட்டி

திருமலை: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது முடிந்துவிட்ட அத்தியாயம் என்று மாநில பாஜ தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கூறினார். திருப்பதியில் ஆந்திர மாநில பாஜ தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் மனநிலையை வென்றுள்ளார். அதன் காரணமாகவே பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. நாளை பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். மாலை ரேணிகுண்டாவில் நடைபெறக் கூடிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து என்பது முடிந்த அத்தியாயம். சிறப்பு அந்தஸ்தை காட்டிலும் ஆந்திராவிற்கு சிறப்பு திட்டத்தின் கீழ், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை காட்டிலும் அதிக அளவில் நிதியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜ அரசு வழங்கியுள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு, அதுபற்றி மக்களுக்கு தெரியாத வகையில் பார்த்துக் கொண்டார்.

சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது தவிர மத்திய அரசின் 9 கல்வி நிறுவனங்கள் ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு யாராக இருந்தாலும் சரி சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாக கூறி அரசியல் செய்து வருகின்றனர். ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எப்போதும் துணையாக இருக்கும். எனவே சிறப்பு அந்தஸ்து என்ற முடிந்துபோன அத்தியாயத்தை யாராலும் பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மாநில பாஜ தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.

Tags : State BJP , Andhra Pradesh
× RELATED பள்ளிக்கல்விக்கான நிதியை...