×

எட்டு வழிச்சாலையை எதிர்த்து என்னை பேசவிடாமல் செய்து விட்டனர்: திமுக எம்பி பார்த்திபன் பேட்டி

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தடுப்பது பற்றி மேடையில் பேசவிடாமல் செய்து விட்டதாக எம்பி பார்த்திபன் கூறினார். சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில், திமுக எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். வழக்கமாக முதல்வர் பழனிசாமி பங்கேற்ற அனைத்து அரசு விழாக்களிலும் எம்பி, எம்எல்ஏக்கள் பேசுவார்கள். இறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி, விழாவை நிறைவு செய்வார். ஆனால் நேற்று நடந்த பாலம் திறப்பு விழாவில், நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் வரவேற்றார். அதன்பின், எம்பி, எம்எல்ஏக்களுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல், நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்தால், திமுகவுக்கும் கொடுக்க வேண்டும் என்பதால், யாருக்கும் பேச வாய்ப்பளிக்காமல் நேரடியாக முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியையும் 15 நிமிடத்தில் முடித்துக்கொண்டனர்.

விழா முடிவில், திமுக எம்பி பார்த்திபன், கூறியதாவது:  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்காமல், தொலைபேசியில் கூறினர். இது எங்களை புறக்கணித்ததாக ஆகாது. மக்களை புறக்கணித்துள்ளனர். 8 வழிச்சாலை திட்டத்தால், மக்கள் தினமும் வேதனையில் உள்ளனர். இந்த திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பது குறித்து மேடையில் பேச வந்தேன். ஆனால், பேச அனுமதி தராமல் தடுத்துவிட்டனர். 15 நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வர் சென்றுவிட்டார். 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட்டாலும், எடப்பாடி பழனிசாமி கைவிடமாட்டார். கமிஷனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

சேலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் ஏராளமாக உள்ளது. ஆனால்,தேவையில்லாத இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. குறுகிய எண்ணத்துடன் முதல்வர் செயல்படுகிறார். மாநகரில் தேவையில்லாத இடங்களில், உறவினர்களின் கமிஷனுக்காக பாலங்களை கட்டுகிறார். எங்களை புறக்கணித்தாலும், மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

திமுக எம்பியை தேடிய முதல்வர்
புதிதாக கட்டப்பட்ட பாலத்தை,ரிப்பன் வெட்டி திறக்க பாலத்தின் ஆரம்ப பகுதிக்கு முதல்வர் சென்றார். அவருடன் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் சென்றிருந்தனர். ரிப்பன் வெட்டுவதற்கு முன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்கே எம்பி, எம்எல்ஏ எனக்கேட்டு, அவர்களை அழையுங்கள் எனக்கூறினார். உடனே அங்கிருந்த போலீசார், திமுக எம்பி, எம்எல்ஏவை வாக்கிடாக்கி மூலம் தேடினர். போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று, திமுக எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரனை அழைத்துச்சென்றனர். அதன்பின் பாலத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் திறந்தார்.


Tags : Parthiban ,DMK ,paths , Eight leads, DMK, DMK MP Parthiban
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி