×

தமிழகத்தில் 10 லட்சம் மளிகை கடைகள் இரவு 1 மணி வரை செயல்படும்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் மளிகை கடைகள் இனிமேல் இரவு 1 மணி வரை செயல்படும் என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது: இரவு நேரத்தில் கடைகளை இயக்க மத்திய, மாநில அரசுகளிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம். அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். அரசின் இந்த முடிவால் மிகவும் பயனடைய போவது பொதுமக்கள்தான். காலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் காலையில் கடைகளுக்கு சென்றால் திறந்திருக்காது. இனிமேல் அவர்கள் எந்த நேரம் நினைத்தாலும் பொருட்களை வாங்க முடியும். தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மளிகை கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு வழக்கமாக அடைக்கப்படும்.

இனிமேல் இரவு 1 மணி வரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெயின் ரோட்டில் உள்ள கடைகளை விட தெருக்களில்தான் அதிக அளவில் கடைகள் உள்ளன. எனவே, தெரு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். 100 சதவீத கடைகளில் 50 சதவீதம் கடைகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணிக்கு கடையை திறக்க வேண்டுமென்றால் நான்கரை மணிக்கு விழித்தால்தான் முடியும்.  இதனால், வணிகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இனிமேல் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறந்து வைத்து காலையில் கொஞ்சம் தாமதமாக திறக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மதுரை மட்டும்தான் தூங்கா நகரமாக இருந்து வந்தது. இனிமேல் எல்லா மாவட்டங்களும் தூங்கா நகரமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : grocery stores ,Tamilnadu , Tamil Nadu, maligai stores
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு