நிதி அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் பலனில்லை: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

கொல்கத்தா: ‘நிதி அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். திட்டக் கமிஷனுக்கு பதிலாக கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பை பாஜ கூட்டணி அரசு உருவாக்கியது. அப்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதி ஆயோக்கின் முதல் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இந்நிலையில், வரும் 15ம் தேதி நிதி ஆயோக்கின் 5வது நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். நாட்டின் வளர்ச்சி பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ள இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘நிதி ஆயோக் அமைப்புக்கு எந்த நிதி அதிகாரமும் இல்லை என்பதுடன், மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு உதவும் அதிகாரமும் இல்லை. எனவே, பலனற்ற அந்த கூட்டத்தில் நான் பங்கேற்க விரும்பவில்லை,’ என கூறியுள்ளார். கொலிஜியம் வேண்டும்: இதற்கிைடயே கொல்கத்தாவில் நேற்று மம்தா அளித்த பேட்டி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்படுவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. எனவே, அந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, உண்மையை கண்டறியும் குழுவை நியமிக்க வேண்டும். இதே கோரிக்கையை மற்ற எதிர்க்கட்சிகளும் முன்வைக்க வேண்டும். இதுபற்றி காங்கிரசுடன் பேசுவேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை கொலிஜியம் அமைப்பு முடிவு செய்வதுபோல், தேர்தல் ஆணையர்களையும்கொலிஜியமே நியமிக்க வேண்டும் என்றார்.

Tags : Mamata Banerjee , Mamta Banerjee
× RELATED பொருளாதார மந்தநிலை பற்றி பிரதமர் வாய்...