×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரோஜர் பெடரரை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் நடால்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். பரபரப்பான அரை இறுதியில் நடப்பு சாம்பியனும் பிரெஞ்ச் ஓபனில் 11 முறை பட்டம் வென்ற சாதனையாளருமான நடால், பரம எதிரியான சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரை எதிர்கொண்டார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பிரெஞ்ச் ஓபனில் பெடரருடன் 6 முறை மோதியுள்ள அவர் அனைத்து போட்டியிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் பெடரரை அவர் முதல் முறையாக வீழ்த்தியுள்ளார். நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) - டொமினிக் தீம் (ஆஸ்திரியா) இடையே நடைபெறும் 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் வீரருடன் பைனலில் நடால் மோதுவார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவா (19 வயது, 38வது ரேங்க்) 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டாவை (28 வயது, 26வது ரேங்க்) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தி (23 வயது, 8வது ரேங்க்) 6-7 (4-7), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை (17 வயது, 51வது ரேங்க்) வீழ்த்தினார்.

இறுதிப் போட்டியில் வோண்ட்ருசோவா - ஆஷ்லி பார்தி மோதுகின்றனர். இருவருமே முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் லதிஷா சான் (தைபே) - ஐவன் டோடிக் (குரோஷியா) ஜோடி 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) - மேட் பாவிச் (குரோஷியா) ஜோடியை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது.

Tags : Roger Federer ,French Open ,Natalie , Nadal
× RELATED ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் நடாலை...