கேரளாவில் நிபா வைரஸ் பரவுகிறது... கோவை, நீலகிரி எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கோவை: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை, நீலகிரி  மாவட்ட எல்லைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடக்கிறது. நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மாநிலத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடலில் நீர் சத்து குறைவு ஏற்படுவதால், சோர்வு, உடல் வலி போன்ற உபாதைகள் ஏற்படும். கேரள மாநிலத்தில் பரவியுள்ள இந்த வைரஸ் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக-கேரள எல்லையில் உள்ள நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

கோவை மாவட்ட எல்லையான வாளையாறு, கொழிஞ்சாம்பாறை, மீனாட்சிபுரம், ஆனைகட்டி, வேலந்தாவளம் உள்ளிட்ட 8 இடங்களில் மருத்துவ கண்காணிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி கூறியதாவது:- மாவட்ட எல்லைகளில் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் மருத்துவ கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாளையாறு எல்லையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் அந்த பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மற்ற எல்லைகளில் பகல் நேரங்களில் மட்டுமே கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தில் இதுவரை நிபா வைரஸ் தாக்குதல் ஏதும் இல்லை என்றார். இதேபோல கேரள-நீலகிரி மாவட்ட எல்லையிலும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு தற்போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் பந்தலூர் மற்றும் கூடலூர் வழியாக வருகின்றனர். இவர்களில் யாருக்கேனும் நிபா வைரஸ் தொற்று இருந்தால், அது மாவட்டத்தில் உள்ள மற்ற மக்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனால், கேரள-நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள தாளூர், சேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 6 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை சிறப்பு முகாமை அமைத்துள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி கூறியதாவது: முன் எச்சரிக்கை நடிவடிக்கையாக கேரள மாநிலம்-நீலகிரி மாவட்ட எல்லையில் 6 சோதனை சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம் 24 மணி நேரமும் செயல்படும். முகாமில், இந்த குழுவினர் கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்வார்கள். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகி யாரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை என்றார்.

Tags : Nifa ,Kerala ,border ,Nilgiris ,Coimbatore , Nifa virus, fever, Kerala, Tamil Nadu, Coimbatore, Nilgiris
× RELATED கேரளாவை சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி...