×

இளம்பெண்ணுடனான தொடர்பை துண்டிக்க மறுத்ததால் ஆத்திரம்; புகைப்பட கலைஞரை கொன்று உடலை எரித்த 3 பேர் கைது

நாகர்கோவில்: இளம்பெண்ணுடன் தொடர்பை துண்டிக்க மறுத்த புகைப்படக் கலைஞரை கத்தியால் குத்திக்கொன்று உடலை எரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் பழையாற்று கரையில் உள்ள சுடுகாட்டு கொட்டகையில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அவரது உடல் முழுவதும் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. இதுகுறித்து தனிப்படை அமைத்து கோட்டார் போலீசார் விசாரித்தனர். சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான ஒரு கார் சிக்கியது.  

அந்த கார் திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ரெஸி (34) என்பவரின் பெயரில் இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் மாயமாகி இருந்தார். இது தொடர்பாக ரெஸியின் உறவினர்களிடம் விசாரித்தனர். அப்போது நாகர்கோவிலில் உள்ள நண்பர்களை சந்திக்க செல்வதாக அவர் கூறி விட்டு சென்றார் என தெரிவித்தனர். இதையடுத்து ரெஸியின் உறவினர்களை அழைத்து வந்து சுடுகாட்டில் கண்டெடுத்த உடலை காட்டினர். இதை பார்த்ததும் அது ரெஸி தான் என உறுதிப்படுத்தி, உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து ரெஸி மொபைல் போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் கன்னியாகுமரியை சேர்ந்த பைசல் (25) என்பவர் ரெஸியிடம் பேசியது தெரிய வந்தது. எனவே பைசலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ரெஸியை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை எரித்தது உறுதியானது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலை செய்யப்பட்ட ரெஸி புகைப்பட கலைஞர். இவர் இலங்கை அகதி ஆவார். இவரது மனைவி எலிசா சந்திரவதனி. வள்ளியூர் சமூகரெங்கபுரத்தில் வசித்து வந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக ரெஸியை அவரது மனைவி பிரிந்து சென்று, தற்போது மண்டபம் முகாமில் உள்ளார். புகைப்பட கலைஞர் என்பதால் ரெஸி அடிக்கடி நாகர்கோவிலுக்கு வருவது வழக்கம். இவரது நண்பர் கேதீஸ்வரன் (24). இவரும் இலங்கை அகதி ஆவார். கன்னியாகுமரி பெருமாள்புரத்தில் உள்ள அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

கேதீஸ்வரன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற ரெஸி, அவரின் சகோதரியுடன் பழகி உள்ளார். இதை கேதீஸ்வரன் கண்டித்தார். ஆனால், ரெஸி கேட்க வில்லை. தொடர்ந்து அவரது சகோதரியுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரெஸி மீது, கேதீஸ்வரன் ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் இவர்களின் நண்பர்களில் ஒருவரான கன்னியாகுமரியை சேர்ந்த பைசல், ரம்ஜானையொட்டி நேற்று முன் தினம் (5ம்தேதி) விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்துக்காக பைசல், ரெஸியை அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்கள் கேதீஸ்வரன் மற்றும் பழனி என்ற கண்ணன் (26) ஆகியோருடன் சமூகரெங்கபுரத்துக்கு சென்று ரெஸியை அழைத்து வந்துள்ளனர். ரெஸியின் காரில் நால்வரும் புறப்பட்டு உள்ளனர்.

வரும் வழியில் கேதீஸ்வரன், எனது சகோதரியுடன் நீ பழக கூடாது. அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க போகிறோம் என ரெஸியிடம் கூறி உள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கேதீஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காருக்குள் வைத்தே ரெஸியை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் இரவில் கரியமாணிக்கபுரம் சுடுகாட்டுக்கு உடலை கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். காரை நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே விட்டு விட்டு, இவர்கள் தப்பி உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர். இந்த கொலை தொடர்பாக தற்போது கேதீஸ்வரன், பழனி, பைசல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : photographer , Teenager, affair, artist, photographer, killed, detained
× RELATED நாமக்கல் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட...