×

ஏர்போர்ட்டில் வட்டமடித்து பறக்கும் புறா, காகங்களால் பாதுகாப்பு கேள்விகுறி

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வாரம் 106 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் பகலில் குறைவாக உள்ளது. நிழல்தரும் இடங்களை மக்கள் நாடுகின்றனர்.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியான பொழிச்சலூர், கவுல்பஜார் போன்ற பகுதிகளில் உள்ள புறாக்களும், குளிர்ச்சியான இடங்களை தேடி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது தளத்தில் உள்ள பயணிகள் புறப்பாடு பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளது. முதலில் 2 புறா வந்தது. தற்போது 4 ஆகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்த புறாக்கள் சுற்றி திரிகிறது. விமானத்தில் உட்கார்ந்திருக்கும் பயணிகள், சாப்பிட்டு விட்டு கீழே போடுபவற்றை சாப்பிடுகிறது. மேலும், குப்பை தொட்டியில் உள்ள உணவுகளையும் சாப்பிட்டு விட்டு, ஏ.சி.யில் இருந்து வழியும் தண்ணீரை குடித்து விட்டு சுற்றி சுற்றி வருகிறது.

புறாக்கள் என்பதால் பயணிகளுக்கு அச்சம் இல்லை. ஆனால் விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்குள் பறவைகளையோ, விலங்குகளையோ அனுமதிக்க கூடாது. மீறி வந்தால் பாதுகாப்பு குறைபாடு என்று எடுத்துக்கொள்ளப்படும். எனவே இது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. புறாக்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. கடந்தாண்டு 2 குரங்குகள் 3 நாட்களாக அட்டகாசம் செய்தது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பிடித்தனர்.

காக்காவும் புகுந்தது. அதையும் பிடித்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களாள ரெட் அலர்ட் அமலில் உள்ளதால் வெளியில் இருந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் பறவைகளை பிடிப்பதற்கென உள்ளவர்களை அழைத்து வருபவர்களுக்கு பிசிஏஎஸ் பாஸ் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 புறாக்கள் மற்றும் 2 காகங்கள் சுற்றி வந்தது. இது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதிகாரிகளும் திணறி வருகின்றனர். இது பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.


Tags : airport , Chennai, Airport, Pigeon, Crow
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்