×

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் 24 மணி நேரமும் செயல்பட இன்று முதல் அனுமதி

சென்னை: தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தியேட்டர்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு கடைகள், நிறுவனங்களின்  பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள் குறித்த சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இந்த புதிய சட்டத்தின்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் நிறுவனங்கள்  தினமும் 24 மணி நேரமும், வாரத்துக்கு 7 நாட்களும், ஆண்டுக்கு 365 நாட்களும் திறந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

இதனை மாநிலங்கள் அவர்கள் நடைமுறை தேவைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம், அமல்படுத்தலாம் என்றும்  தெரிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன்,  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்து வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று  வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் தினமும் 24 மணி நேரமும் செயல்பட 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வசதி,  விருப்பத்தை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம்.

இந்த அரசாணையுடன், தொழிலாளர்களின் பணி நேரம், பாதுகாப்பு ஆகியவையும் வரையறை செய்யப்பட வேண்டும். அதன்படி ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது  வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்றால் சம்பளத்துடன் கூடிய கூடுதல் பணியாக (ஓவர் டைம்) இருக்க வேண்டும். அதுவும் கூடுதல் பணியும் சேர்த்து ஒரு  நாளைக்கு 10.30 மணி நேரம் அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் அனுமதியை பொறுத்து கடைகள் இரவில் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Shops ,business enterprises ,Tamil Nadu , Tamilnadu, shops, business enterprises, theaters, 24 hour shops, Tamilnadu state
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி