×

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை இதுவரை ஒப்படைக்காத மாநில அரசு: ஆர்.டி.ஐ மூலம் அம்பலமான தகவல்!

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இதுவரை நிலத்தை ஒப்படைக்கவில்லை என்ற உண்மை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகத்தில் 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் 2018ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி மதுரை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் 17ம் தேதி ஒப்புதல் வழங்கியது. 2019 ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடி நேரடியாக மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாக தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை திருநகரைச் சேர்ந்த வி.எஸ்.மணி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் மதுரையில் அமையப்போகும் எய்ம்ஸ் மருத்துவனை விவரங்களை அறிய 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1,264 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  காம்பவுண்ட் சுவர் அமைக்கவும், மண் பரிசோதனை செய்யவும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எந்த கட்டுமானப்பணிகளும் தொடங்கப்பட்டவில்லை. பூர்வாங்க பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிட வரைப்படம் இன்னும் முடிவாகவில்லை. தற்போது வரை எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்ட நிலம் எதையும் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை என அவரது 5 கேள்விகளுக்கு பதில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மதுரை எய்ம்ஸ் நிலவரம் அம்பலமாகியுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

இந்த நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளது என்றும் பணியில் எந்தத் தொய்வும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் வரவுள்ளனர். அவர்கள் மதுரையில் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தகுதியான இடம் பற்றி ஆய்வு செய்கின்றனர் எனவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.




Tags : state government ,land ,hospital ,AIIMS ,Madurai ,RTI , Madurai, AIIMS Hospital, Land, State Government, RTI, Central Government
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!