×

10% இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும்: அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம்

புதுடெல்லி: பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளுக்கு முறையாக அமல்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்கள் அல்லது 5 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

1000 சதுர அடிக்கு கீழ் சொந்த வீடு உள்ளவர்களுக்கும், நகராட்சிப் பகுதிகளில் 900 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களுக்கும், நகராட்சி அல்லாத பகுதிகளில் 1800 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ படிப்பிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ள நிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தும்படி அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு முறையை முழுமையாக அமல்படுத்த, ஏற்கனவே இருப்பதிலிருந்து கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு முறையை இந்த ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் எனவும் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சில மாநிலங்களில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணபம் வழங்கும் தேதி நிறைவடைந்த நிலையில், மருத்துவ இடங்களை அதிகரிக்க தேவையான முன்மொழிவுகளை, மாநில அரசுகள் வரும் 11ம் தேதிக்குள் எம்.சி.ஐ.க்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் 10% இடஒதுக்கீடு முறையை எதிர்த்து வரும் நிலையில், மருத்துவ கவுன்சில் இவ்வாறான கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : State Governments ,Indian Medical Council , 10% Reservation, State Governments, Indian Medical Council, Letter
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...