×

லஞ்சம் பெற்று கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட மறுப்பதாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது புகார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா மற்றும் பதிவாளர் குமார் உள்ளிட்டோர் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

92 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், மாணவர் சேர்க்கை இல்லாத 92 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அவற்றுள் ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தியும், ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்தும் பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தரமற்றவை என அறிவிக்கப்பட்ட 92 கல்லூரிகளுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.

 தரமற்ற 92 கல்லூரிகளின் விவரங்கள் வெளியாகவில்லை

இந்நிலையில் எந்தெந்த கல்லூரிகள் தரமற்றவை என்ற விவரங்களை அறிவிக்காமல் பொதுவாக 92 கல்லூரிகள் தரமற்றவை என அறிவித்ததால் அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தரமற்றவை என அறிவிக்கப்பட்ட 92 கல்லூரிகளின் விவரங்கள் அறிவிக்கப்படாததால் அந்த கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்கள் தரமான கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் தரமற்ற கல்லூரிகள் எவை எவை என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் இதுவரை தரமற்ற பொறியியல் கல்லூரிகள் குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை.

துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச புகார்

இந்நிலையில் லஞ்சம் பெற்று கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட மறுப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் விவரங்களை வெளியிட மறுப்பதற்கான பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தகுதியற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை பகீரங்கமாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் கருப்பு பணத்தை லஞ்சமாக பெற்றனரா எனவும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  


Tags : Anna University ,Surappa ,burglary colleges , Anna University, Vice Chancellor, Surappa, Vigilance Department, Engineering, Colleges
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!