×

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆவடியில் உள்ள மாணவரின் தந்தையான வழக்கறிஞர் ரமணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. அதபோல், அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. எனவே, அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து கடந்த மாதம் 24ம் தேதியன்று தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் ஆட்சியருக்கு மனு கொடுத்தேன். ஆனால் அம்மனு மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டும் தொடங்கிவிட்டது.

எனவே அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்காக தொடர்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமலும், அதேபோல் அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வந்த 903 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விளக்கம் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் விளக்கமளிதார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று வழக்கறிஞர் ரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.  



Tags : schools ,facilities ,Tamil Nadu , Authorization, Basic Facility, Schools, Notices, High Court, Tamilnadu Government
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!