மண்ணில் அரைஅடி புதைந்த மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடிக்க நடவடிக்கை

* மக்கள் செல்லாதபடி பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு

மன்னார்குடி : மண்ணில் அரை அடி உள்வாங்கிய மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிக்குள் மக்கள் செல்லாதபடி பேரிகார்டு தடுப்பு போடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் இந்த கட்டிடம் எந்த நேரமும் பரபரப்புடன் காணப்படும். 49 ஆண்டுகளான இந்த மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்துள்ளது.


இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை இந்த கட்டிடத்தில் நோயாளிகள், உடன் வந்தோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என 250 பேர் இருந்தனர். ஓபி சீட்டு வாங்க நோயாளிகள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தின் பின்புறம் இருந்த மேற்கூரை தகரம் விழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள், ஊழியர்கள் பீதியில் அலறியடித்து வெளியே ஓடிவந்து பார்த்தபோது கட்டிடத்தின் முன் பகுதியில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டிடத்தின் ஒரு பகுதி அரை அடி ஆழம் உள்வாங்கியது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

இதனால் மருத்துவமனை சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இரும்பு ஜன்னல் கம்பிகள் வளைந்தது. சித்தா பிரிவில் டைல்ஸ் உடைந்து சேதமடைந்தது. இதனால் நோயாளிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். உடனே ஊழியர்கள் நோயாளிகளை கட்டிடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் அனைத்து ஊழியர்களும் வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் உமா, மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், தாசில்தார் லட்சுமி பிரபா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், இந்த கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை சரியில்லாததால் கட்டிடத்தை இடிக்ககோரி கடந்த 15 நாட்களுக்கு முன்பே மருத்துவமனை சார்பில் திருவாரூர் மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் டாக்டர் உமாவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டிடம் இடிக்கப்படும் என்றார்.
சேதமடைந்த கட்டிடத்தை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று உடனே இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை கட்டிடத்தை சுற்றி பேரி கார்டு வைத்து மக்கள் செல்லாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : district ,Mannargudi ,state ,chief hospital , Mannargudi ,government hospital,demolish, people banned
× RELATED மன்னார்குடி கோட்டாட்சியருக்கு பி.ஆர்.பாண்டியன் மிரட்டல்