×

மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை, மண்டியிட்டும் கிடந்ததில்லை: துக்ளக்கின் விமர்சனத்திற்கு நமது அம்மா நாளிதழ் காரசார பதிலடி

சென்னை: அதிமுக குறித்த துக்ளக் பத்திரிகை விமர்சனத்திற்கு நமது அம்மா நாளிதழ் காரசார பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக, மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றபோது, அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து, துக்ளக் இதழில் வெளியிட்ட ஒரு கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல துக்ளக் குறிப்பிட்டிருருந்தது. அதாவது மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் மறைமுகமாக இல்லாமல் நேரடியாக துக்ளக் சொல்லியிருந்தது.

இந்த நிலையில், துக்ளக் பத்திரிகையின் விமர்சனத்திற்கு, நமது அம்மா நாளிதழ் இன்று பதிலடி கட்டுரை வெளியிட்டுள்ளது. குத்தீட்டி என்ற புனைப்பெயரில் எழுதப்படும் கட்டுரை பிரிவில் இந்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: ‘தரங்கெட்ட பத்திரிகையும்..தரம் தாழ்ந்த விமர்சனமும்..துக்ளக். துக்ளக் பத்திரிக்கை தொடர்ந்து கழகத்தின் மீது தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறதே? பாஜக அமைச்சர்கள் மட்டும் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவும், கழகம் வெளியே நின்று சாப்பிடுவதற்கு ஏங்குவதாகவும் ஒரு கார்ட்டூனை வரைந்திருக்கிறது துக்ளக். பொது வாழ்க்கை என்பது சேவையாற்றுவது. ஆனால் இதற்கு பதிலாக சாப்பிடுவதே அரசியல் என்பது போல துக்ளக் தீட்டியிருக்கும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களைத் தான் மலிவாக சித்தரித்த அவர்களின் நேர்மையை களங்கப்படுத்தி இருக்கிறது. கூடவே, அதிகாரத்திற்கு ஏங்குவது போல அண்ணா திமுகவை அப்பதிரிக்கை விமர்சித்திருக்கிறது.

கழகம் தொடங்கப்பட்டு 42 வருடங்களில் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றி பெற்று ஆட்சியை தொடர்கிற அரசியல் புரட்சியை தமிழகத்தில் 32 வருடங்களுக்கு பிறகு நடத்திக் காட்டியிருக்கும் அண்ணா திமுக ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கும் நின்றதில்லை. மண்டியிட்டும் கிடந்தது இல்லை என்பதே வரலாறு. ஆனால், இதையெல்லாம் அறியாதவரகள் போல கழகத்தில் அமைச்சர்களை இம்போட்டன்ட் என்றும், பந்திக்கு அலைகிறவர்கள் என்றும் ஒரு குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு துக்ளக் பத்திரிகை தொடர்ந்து கழகத்தையும், கழகத்தின் அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது. சோ நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக்கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறிவிட்டது என்பதைத் தான் காட்டுகிறது. அதனால், இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு கழகத்து சிப்பாய்கள் செவி மடுக்காமல் கடந்து போவது ஒன்றே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : government ,Tughlaq , Central Government, Power, Thuglak, Namadhu Amma magazine, AIADMK
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை