×

உலகின் மிகவும் வெப்பமான பகுதியாக மாறியுள்ள ராஜஸ்தானின் சுரு நகரம்..: 120 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தால் மக்கள் கடும் அவதி!

ராஜஸ்தான்: உலகின் மிகவும் வெப்பமான நகரம் இந்தியாவில் தான் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. காலை வேளையில் பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் வெயிலின் கொடூரமான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வெப்பமயமாதலால் இந்தியாவின் பல்வேறு இடங்களில் தண்ணீருக்கு வரலாறு காணாத வகையில் இம்முறை பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க அரசும், சமூக ஆர்வலர்களும் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் உலகின் மிகவும் வெப்பமான நகரமாக ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாறியுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக 120 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெறித்து வருகிறது.

ஜூன் 1ம் தேதியன்று 124.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிக வெயில் காரணமாக வேலை பார்ப்பதற்கான கால அட்டவணையை பலரும் மாற்றிக்கொண்டுள்ளனர். வாழ்க்கை முறையையும் அவர்கள் மாற்றிக்கொண்டுள்ளனர். எண்ணெய், அசைவ உணவுகளை தவிர்த்து பச்சைக் காய்கறிகள், வெங்காயம், மோர், தயிர், சப்பாத்தி ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுகின்றனர். மதிய உணவு உண்பதை தவிர்த்துவிட்டு மோர் மட்டுமே குடிப்பதாகவும் அந்த மக்கள் கூறியுள்ளனர். காலை 10.30 மணிக்கு மேல் வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்கின்றனர். இதனால், சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் இல்லை. வெளியில் செல்லும்போதெல்லாம் 10 கிலோ அளவுக்கு பனிக்கட்டியை வாங்கி வந்து ஏர் கூலர் எந்திரத்திலும், தண்ணீர் தொட்டிகளிலும் போட்டுவைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சுருவின் அருகே உள்ள பினாசர், போதி, சதாரா, ஜஸ்ராசர் ஆகிய இடங்களிலும் வெயில் வாட்டி வருகிறது. வெப்பத்தின் கடுமையால் ஏற்படும் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோல் ஒவ்வாமை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டு சுரு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெயில் தொடர்பான நோய்களால் சுமார் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கோகா ராம் தெரிவித்துள்ளார். இதனால், மருத்துவர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான வெயிலின் தாக்கத்தாலும் தண்ணீர் கிடைக்காததாலும் பறவைகள் மரங்களில் இருந்து விழுந்து உயிரிழக்கும் பரிதாபமும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது.


Tags : capital city ,world ,Rajasthan , Heat, Rajasthan, Churu city
× RELATED சென்னை விமானநிலையத்தில் உற்சாக...