×

வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி இஎம்ஐ எவ்வளவு குறையும்?

* 5 மாதத்தில் 0.75 சதவீதம் சரிந்தது
* வங்கிகள் அமல்படுத்தினால் பலன்

புதுடெல்லி: குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி கால் சதவீதம் குறைத்து, 5.75 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த பட்ச வட்டியாக இது கருதப்படுகிறது. வங்கிகள் இந்த வட்டி குறைப்பை அமல்படுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு வீடு, வாகன கடன் இஎம்ஐ குறையும்.

பொருளாதார சரிவு: ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டின் 4 காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி சரிந்தது. 4ம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக சரிந்திருந்தது. எனவே, பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழில்துறையில் முதலீடு பெருகவும் வட்டியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம், கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 4ம் தேதி துவங்கியது.

ஒருமித்த முடிவு: இதில் 6 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டியை  கால் சதவீதம் குறைத்து 5.75 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ 5.5 சதவீதமாக உள்ளது. கடந்த பிப்ரவரியில் இருந்து நேற்டன் தொடர்ந்து 3 முறையாக மொத்தம் 0.75 சதவீதம் வட்டி குறைந்துள்ளது. தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கிய நுகர்வோர் பலன்பெறும் வகையில் வங்கிகள் வட்டி குறைப்பை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் சக்தி காந்ததாஸ் உத்தரவிட்டுள்ளார்.

9 ஆண்டில் மிகக்குறைந்த வட்டி: கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் தலா கால் சதவீதம், நேற்று அறிவிக்கப்பட்ட கால் சதவீதம் என மொத்தம் கடன் வட்டி 0.75 சதவீதம் குறைந்துள்ளது. 2010ம் ஆண்டு ஜூலையில் தான் 5.75 சதவீத வட்டி இருந்தது. வட்டி குறைப்பின் பலனை வங்கிகள் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பெரும்பாலான வங்கிகள் இந்த பலனை முழுமையாக அளிப்பதில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் கால் சதவீதம் வட்டி குறைக்கப்பட்டபோது சில வங்கிகள் 10 முதல் 15 சதவீத வட்டி குறைப்பைத்தான் அறிவித்தன. பொதுத்துறை வங்கிகள் சராசரியாக 20 அடிப்படை புள்ளிகளும், தனியார் வங்கிகள் சராசரியாக 5 அடிப்படை புள்ளிகளும் வட்டியை குறைத்ததாக சில ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எவ்வளவு குறையும்?: வங்கிகளின் கடன் வட்டியில் தற்போது அறிவிக்கப்பட்ட கால் சதவீதம் குறைக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ ஓரளவு குறையும். உதாரணமாக, ஒருவர் 30 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் வாங்கிருப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு தற்போது 8.6 சதவீத வட்டி என்றால், 20 ஆண்டில் திரும்பி செலுத்த அவர் மாத இஎம்ஐ ரூ.26,225 செலுத்த வேண்டும். இதில் கால் சதவீதம் குறைத்தால் வட்டி 8.35 சதவீதம் ஆகிவிடும். இதன்படி வட்டி ரூ.474 குறைந்து ரூ.25,751 ஆக குறையும்.

இதுதவிர, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - செப்டம்பரில் சில்லரை விலை பண வீக்கம் 3 முதல் 3.1 சதவீதமாக உயர்ந்திருக்கும். பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்திருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கை ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ஏடிஎம் கட்டணம் மாற்றி அமைக்க குழு:
வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்களிலும், பிற ஏடிஎம்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு இலவச பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கின்றன. அதற்கு மேல் ஜிஎஸ்டியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். சில வங்கிகள் இலவச பரிவர்த்தனைக்கு பிறகு ஏடிஎம்களில் பணம் எடுக்க ரூ.20 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி, பணமற்ற பரிவர்த்தனைக்கு (இருப்பு தொகை பார்த்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல்) ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்கின்றன.

சில தனியார் வங்கிகள் பணமற்ற பரிவர்த்தனைக்கு ரூ.8.50 வசூலிக்கின்றன.  பிற வங்கி ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்யும்போது வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி, அவர் பயன்படுத்தும் பிற ஏடிஎம்க்கு உரிய வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக மறு ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி குழு அமைக்க உள்ளது. இந்த குழு பரிந்துரைப்படி கட்டணங்களில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி-யில் பணம் அனுப்ப கட்டணம் இல்லை:
வங்கிகளில் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்பப்படுகிறது. என்இஎப்டி மூலம் ஒருவருக்கு பணம் அனுப்பினால் சில மணி நேரங்களில் அல்லது அடுத்த நாள் காலையில் பணம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பினால் உடனடியாக சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் சென்று சேர்ந்து விடும்.

பொதுவாக வங்கிகள் என்இஎப்டி மூலம் பணம் அனுப்ப ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை வசூலிக்கின்றன. ஆர்டிஜிஎஸ் முறையில் அனுப்ப 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கின்றன. லட்சங்களில் பணம் அனுப்புபவர்கள் ஆர்டிஜிஎஸ் முறையை தேர்வு செய்கின்றனர். மேற்கண்ட கட்டணங்களை முழுவதும் நீக்கி விட்டதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.

இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பும் நேரம், கடந்த 1ம் தேதி முதல் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க கட்டணத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : EMI ,Reserve Bank , Interest rate, lowering, how much will the Reserve Bank, EMI decrease?
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...