×

திருவனந்தபுரத்தில் தங்கம் கடத்திய பெண்ணுக்கு பாகிஸ்தான் நபருடன் தொடர்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 25 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, இந்த வழக்கை மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க தீர்மானித்துள்ளனர். கடந்த மே 13ம் தேதி துபாயில் இருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் திருவனந்தபுரம் திருமலை பகுதியைச் சேர்ந்த சுனில்குமார், கழக்கூட்டத்தை சேர்ந்த செரினாஷாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 8.17 ேகாடி மதிப்புள்ள 25 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செரினா ஷாஜி துபாயில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அடிக்கடி இவர் திருவனந்தபுரம் வந்து செல்வார். இவரை பயன்படுத்தி கடத்தல் கும்பல் பலமுறை தங்கம் கடத்தியுள்ளது. சுனில்குமாரும் இவருமாக கணவன், மனைவி போல விமானத்தில் பயணம் செய்து தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். இந்த கடத்தலுக்கு திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க இலாகா சூப்பிரண்ட் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணன் மற்றும் 6 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியான இசையமைப்பாளர் பாலபாஸ்கருடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. பாலபாஸ்கர் விபத்தில் இறந்தாரா அல்லது அவரை பணம் கொடுக்க வேண்டிய தகராறில் கும்பல் கொலை செய்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட செரினாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த நதீன் என்பவருடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. செரினா நடத்தி வரும் பியூட்டி பார்லருக்கு நதீன் தான் அழகு சாதனங்களை வழங்கி வந்துள்ளார். இவர்தான் தங்கம் கடத்தல் கும்பலுக்கு செரினாவை அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. செரினாவுக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் இந்த வழக்கை மத்திய உளவு அமைப்புகளான ரா, மற்றும் என்ஐஏ விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Trivandrum , Trivandrum, Gold, Pakistan, Contact
× RELATED 10 நிமிடம் முன்னதாகவே புறப்படும்...