×

நாயுடு உத்தரவை மாற்றினார் முதல்வர் ஜெகன்: சிபிஐ விசாரணைக்கு ஆந்திரா தடை நீக்கம்

அமராவதி: ஆந்திராவில் சிபிஐ விசாரணை நடத்த, முன்னாள் முதல்வர் சந்திரபாபு விதித்த தடையை, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ரத்து செய்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும், ரெய்டு நடத்தவும், மாநில அரசுகள் பொது ஒப்புதல் வழங்குவது வழக்கம். ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, இந்த பொது ஒப்புதலை வாபஸ் பெற்றார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததால், தே.ஜ கூட்டணியிலிருந்து, தெலுங்கு தேசம் விலகியது. அதன்பின் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ரெய்டு நடத்தியது. இதனால் கோபம் அடைந்த சந்திரபாபு நாயுடு, டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் கீழ் செயல்படும் சிபிஐ அமைப்பு, ஆந்திராவில் விசாரணை நடத்துவதற்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை, கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி வாபஸ் பெற்றார். வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கும், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாது என சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்தது. சிபிஐ நடவடிக்கைக்கு பயந்து சந்திரபாபு நாயுடு இந்த உத்தரவை பிறப்பித்ததாகவும், இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க மாநில அரசுககு அதிகாரம் இல்லை என அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஜெகன் உத்தரவின் பேரில், சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறப்பிக்கப்பட்ட  உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது.

Tags : Jagan ,Naidu ,CBI , Naidu, Chief Minister Jagan, CBI probe, Andhra
× RELATED தலைமுறைகள் கடந்து அனைவரும்...