×

ஜெர்மனியில் பயங்கரம் 100 பேரை துடிக்க துடிக்க கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் தண்டனை

பெர்லின்: ஜெர்மனியில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஓல்டென்பர்க் நகரில் இயங்கும் 2 மருத்துவமனைகளில் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2005 வரை நர்சாக பணியாற்றிய நபர் நீல்ஸ் ஹோஜெல் (42). இவரது பணிக்காலத்தின் கடைசிக்காலத்தில் இளம்பெண் ஒருவர் மாரடைப்பு வந்து இறந்தார். ஆனால், விசாரணையில் அவருக்கு சம்பந்தமில்லாத மருந்து செலுத்தப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று தெரியவந்தது. தொடர் விசாரணையில் அந்த மருந்தை செலுத்தியது நீல்ஸ் என்று தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் தன்னுடைய பணிக்காலத்தில் சுமார் 100 பேரை இதுபோன்று கொலை செய்துள்ளது தெரியவந்தது. அதுவும் தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத நோயாளிகளை, ரத்த ஓட்டத்தை பெருமளவில் எகிறச் செய்து, மாரடைப்பு ஏற்படுத்தும் மருந்துகளை ஊசி மூலம் ஏற்றி ரசித்து வந்துள்ளார்.

இந்த மருந்தை செலுத்தியதும், சாதாரண நோயாளிகள் கூட தாங்க முடியாத இதய துடிப்பால் பெரும் அவதிப்படுவார்கள். இதற்காக நீல்ஸ், அஜ்மலைன் என்ற மருந்தினை பயன்படுத்தி உள்ளார். இந்த மருந்தினால் வயதானவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு துடிக்க, துடிக்க இறந்துள்ளனர். அதை கொஞ்சமும், ஈவு, இரக்கமின்றி பார்த்து ரசித்துள்ளார் நீல்ஸ். இந்த விஷயம் வெளியே தெரியவந்தபோது ஜெர்மனியே அதிர்ந்தது. அவர் மீது 100 கொலை வழக்குகள் சுமத்தப்பட்டன. இதில் 31 வழக்குகளில் போதுமான சாட்சியங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். ஆனால், மற்றவற்றில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. மேலும், நோயாளிகளை கொலை செய்ததை நீல்ஸ் ஒப்புக் கொண்டார். நேற்று முன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னர், நீல்ஸ் தன்னால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார். அவர்களுக்கு எந்த அளவுக்கு மனவேதனை ஏற்பட்டிருக்கும் என்பதை தான் உணர்வதாகவும் கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஓல்டன்பர்க் நகர நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இதில் நீல்சுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பர்மன் உத்தரவிட்டார். நோயாளிகளை துடிக்க, துடிக்க கொன்றது ஏன் என்று நீல்சிடம் போலீசார் கேட்டபோது, ‘‘நர்ஸ் வேலையில் விறுவிறுப்பு இல்லாததால், நோயாளிகளுக்கு ஊசிப்போட்டு அவர்கள் துடிப்பதை ரசித்தேன்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கியமான விஷயம், நீல்ஸ் கொன்ற நோயாளிகளின் எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும் என்று நம்புவதாகவும், ஆனால், அதுகுறித்து ஆதாரங்கள் கிடைக்காததால் தொடர்ந்து அவர் பணியாற்றிய மருத்துவமனையில் இறந்த நோயாளிகளின் விவரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Germany ,nurse , Germany, terror, male nurse, life imprisonment
× RELATED சில்லி பாய்ன்ட்…