உலக கோப்பையில் முதல்முறையாக பாகிஸ்தானை வென்று வரலாறு படைக்குமா இலங்கை

பிரிஸ்டல்: உலகபோப்பை போட்டிகளில் ஒன்றில் கூட பாகிஸ்தானை வெல்லாத இலங்கை இன்றையப் போட்டியில் வென்று வரலாறை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. உலக கோப்பையின் 11வது போட்டி இன்று பிரிஸ்டல் நகரில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த 2 அணிகளுக்கும் இது 3 வது போட்டி. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2வது வெற்றிக்காக களம் காண உள்ளன. முதல் போட்டியில் இரண்டு அணிகளும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. அதிலும் பாகிஸ்தான் 22 ஓவருக்குள் 105 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதனால் வெஸ்ட் இண்டீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இலங்கையும் முதல் போட்டியில் 17 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்ததுடன் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆனால் 2 அணிகளுக்கும் 2வது போட்டியில் பெற்ற வெற்றி போராடி கிடைத்த வெற்றி என்றால் மிகையில்லை. பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இலங்கை 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வென்றுள்ளன. பாகிஸ்தான் தரப்பில் இமாம், பாபர், ஃபகார் ஆகியோர் நல்ல ஆட்டத்திறனுக்கு திரும்பியுள்ளனர், வகாப் ரியாஸ் விக்கெட்கள் எடுத்தாலும் அதிக ரன்களை அள்ளித் தருகிறார். இமத் வாசிம், முகமது ஆமிர் ஆகியோரிடம் விக்கெட் எடுக்கும் வேகம் குறைவாக இருக்கிறது. இலங்கை அணியிலும் கேப்டன்  கருணரத்னே மட்டும் எப்போதும் போராடுகிறார். குசால் பெரேரா, திசாரா பெரேரா ஆகியோர் எப்போதாவது போராடுகின்றனர். மலிங்காவுக்கு 2வது போட்டி நன்றாக அமைந்தது. அந்த போட்டியில்  அசத்திய நுவன் பிரதீப்  இன்றைய போட்டியில் அணியின் வெற்றிக்கு கை கொடுக்கலாம்.

இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றி காரணமாக 2 அணிகளிலும் பெரிய மாற்றம் இருக்காது. அதனால் 2 அணிகளும் வெற்றிக்கு வேகம் காட்டும். ஆனால் இந்த 2 அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் வரலாறு வேறு மாதிரி இருக்கிறது. இந்த 2 அணிகளும் இதுவரை153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் பாகிஸ்தான் 90 போட்டிகளிலும், இலங்கை 58 போட்டிகளிலும்  வெற்றி பெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டி சரிநிகர் சமமாகவும், 4 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் தான் வெற்றி வாகை சூடியுள்ளது. ஆக ஒருநாள் போட்டிகளில் எப்போதும் பாகிஸ்தானின் கையே ஓங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது
அதைவிட முக்கிமானது  உலக கோப்பை போட்டிகளில் இந்த 2 நாடுகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. அவற்றில் ஒன்றில் கூட இலங்கை வென்றதில்லை என்பது வரலாறு. இன்று நடைபெறும் போட்டி மூலம் அந்த வரலாற்றை இலங்கை மாற்றுமா இல்லை பாகிஸ்தான் தொடருமா என்பது தெரியும்.

Tags : Sri Lanka ,World Cup , World Cup, Pakistan, Sri Lanka
× RELATED இலங்கையில் இருந்து சென்னை விமான...