ஆஸி.வீரர் கோல்டர் நைல் அதிரடி வெஸ்ட் இண்டீசுக்கு 289 ரன்கள் இலக்கு

நாட்டிங்காம்: ஒரு கட்டத்தில் தள்ளாட்டத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டத்தாலும், கோல்டர் நைலின்  அதிரடி ஆட்டத்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். ஒஷேன் தாமஸ் முதல் ஓவரை வீசினார். முதல் போட்டியில் ஆட்டநாயகனான வார்னர் இந்தப் போட்டியில் ரன் எடுக்க முடியாமல் திணறினார். அடுத்து 3வது ஓவரில் பிஞ்ச் பேட்டை உரசிச் சென்ற பந்து வீக்கெட் கீப்பர் ஹோப் கையில் தஞ்சம் புகுந்தது.  அப்போது அவர் 6 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா பவுண்டரி விளாசினார். அந்த உற்சாகத்தில் அடுத்த ஓவரில் காட்ரெல் பந்தை  வார்னரும் பவுண்டரிக்கு விரட்ட முயன்றார். பந்தை ஹெட்மயர் கேட்ச் பிடிக்க வார்னர் 3 ரன்களில் வெளியேறினார். அப்போது அணி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது.

தடுமாற்றத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை நிலை நிறுத்தும் முயற்சியில்  ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். ஆனால் அவருக்கு துணையாக இருக்க வேண்டிய கவாஜா 13 ரன்களிலும், மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த மார்கஸ் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். அவரும் 17வது ஓவரில்  ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். அந்த ஓவரில் ரன் ஏதும் கொடுக்காததால் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டருக்கு அது மெய்டன் விக்கெட்டாக அமைந்தது. மார்கஸ் 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களை எடுத்திருந்தார். அப்போது அணியின் ஸ்கோர்5 விக்ெகட் இழப்புக்கு 79 ரன்கள். அடுத்த ஓவரில் பிராத்வெய்ட் வீசிய பந்து அலெக்ஸ் கேரியின் கால் பேடில் பட்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ‘அவுட்’ கேட்டனர். ஆனால் நடுவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் 3வது நடுவரின் முடிவை கேப்டன் ஹோல்டர் நாடினார். முடிவில் அவர்கள் முறையீடு தவறு என்று தெரியவந்தது. அதனால் கேரி  ஆட்டமிழக்கும் கண்டத்தில் இருந்து தப்பினார்.

ஹோல்டர் 22வது ஓவரையும் தனது 2வது மெய்டன் ஓவராக்கினார். ஆனாலும் ஸ்மித்- கேரி இணை வெ.இண்டீஸ் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க ஆஸ்திரேலியா 23.2 ஓவரில் 100 ரன்களை தொட்டது. காட்ரெல் வீசிய 24வது ஓவரில் மட்டும் கேரி 3முறை பந்தை எல்லை கோட்டுக்கு விரட்டினார். ஒரு கட்டத்தில் இந்த இணை நிலைத்து நின்றதால் அணியின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. அனால் அதற்கு ரஸ்ஸல் வேட்டு வைத்தார். அணியின் 31வது ஓவரை வீசிய அவர் கேரியை ஆட்டமிழக்க வைத்தார். கேரி 55 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்தார். அணியின் ஸ்கோர் அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 147ரன்கள். அடுத்து நாதன் கோல்டர் நைல், ஸ்மித்துடன் இணை சேர்ந்த பிறகு ஆட்டத்தின் போக்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானது.  நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் 35.4வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை எட்டினார். அவர் 77 பந்துகளை சந்தித்த 51ரன்கள் எடுத்தார்.ஆட்டத்தின் முதல் சிக்சரை கோல்டர் 39வது ஓவரில் அடிக்க ஆஸ்திரேலியா 200 ரன்களை கடந்தது. அதன் பிறகு ஸ்கோர் வேகமாக உயர ஆரம்பித்தது.

ஆட்டத்தின் 43வது ஓவரில் கோல்டர்  41பந்துகளில் அரை சதத்தை எட்டினார். நீண்ட நேரம் களத்தில் இருந்த ஸ்மித்  45வது ஓவரை வீசிய தாமஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 7 பவுண்டரிகளுடன் 103பந்துகளில் 73ரன்கள் எடுத்திருந்தார். அவர் சுமார் 3 மணி நேரம் களத்தில் இருந்தார். வந்த வேகத்தில் பேட் கம்மின்ஸ் வெளியேறினார். அடுத்து  பவுண்டரி, சிக்சர் விளாசிக் ெகாண்டிருந்த கோல்டரை 49வது ஓவரில் பிராத்வெயிட் ஆட்டமிழக்க செய்தார். அப்போது அவர் 60 பந்துகளில்  4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசியிருந்தார். அதே ஒவரில் ஸ்டார்க்கும் ஆட்டமிழந்தார். அதனால்  ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் எல்லா விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. ஆடம் ஸம்பா பந்து எதையும் சந்திக்காமல் களத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் என்று தள்ளாடிக் கொண்டிருந்த அணியை ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டமும், அலெக்ஸ் கேரியின் ஒத்துழைப்பும், கோல்டரின் அதிரடியும் அதிக ரன்கள் குவிக்க வைத்தது. வெ.இண்டீஸ் தரப்பில் பிராத்வெயிட் 3 விக்கெட்களையும், தாமஸ், காட்ரெல், ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஹோல்டர் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர். அடுத்து எளிதாக பெற வேண்டிய வெற்றியை  289 ரன்கள் எடுத்தால்தான்  வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் வெ.இண்டீஸ் களமிறங்கியது.

Tags : Aussiereur Golder ,West Indies , Goaler Nile, West Indies, Target
× RELATED ஞானத்துடன் கூடிய உயர்சக்தியான நாடாக...