×

வணிகவரித்துறைக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இலக்கு? மண்டல இணை ஆணையர்கள் உடன் ஆணையர் ஆலோசனை

சென்னை: தமிழக வணிகவரித் துறையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மண்டல இணை ஆணையர்களுக்கு ஆணையர் சோமநாதன் அறிவுரை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரி அமலால் மாநில வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை மாநில அரசு அமல்படுத்தியது.

இந்த நிலையில், ஆல்கஹால், எரிபொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி இழப்பை சரி செய்யலாம் என்று மாநில அரசு எண்ணியது. அதன்படியே, கடந்த 2017-18ல் ரூ.73,148 கோடி வருவாய் இலக்கை எட்டியது. இதில், ஆல்கஹால், எரிபொருள் மூலம் மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

இந்த நிலையில், கடந்த 2018-19ல் மாநில சரக்குகள் சேவை வரி மூலம் ரூ.24,509 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், கடந்த 2017-18 நிதியாண்டை போன்று ஆல்கஹால், எரிபொருட்கள் மூலம் மட்டும் 2018-19ல் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை அடைந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்தாண்டு பெற்ற வருவாயை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாக வைத்து இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வணிகவரித்துறை இந்தாண்டு இலக்கு நிர்ணயிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், வணிகவரித்துறை அதிகாரிகள் வருவாய் இலக்கு என்னவென்று தெரியாமல் தவித்தனர். இந்த நிலையில், வணிகவரித்துறை ஆணையர் சோமநாதன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கடந்த நிதியாண்டில் கூடுதலாக வருவாய் ஈட்டிய முதல் மூன்று மண்டல இணை ஆணையர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அதன்படி அதிகளவில் வருவாய் ஈட்டியாக எல்என்டி பிரிவு இணை ஆணையர் மேக்நாத் ரெட்டிக்கு முதல் பரிசும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சுஷில்குமார் இரண்டாவது பரிசும், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் சரஸ்வதிக்கு மூன்றாவது பரிசும் ஆணையர் வழங்கினார்.

தொடர்ந்து ஆணையர் சோமநாதன் கூட்டத்தில் பேசுகையில், ‘ஜிஎஸ்டி வரி திருப்பு தொகையை 7 நாட்களுக்குள் வணிகர்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வணிகவரி மறு சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது’ என்றார். இந்த கூட்டத்தில், கடந்தாண்டைக்காட்டிலும் இந்தாண்டு கூடுதலாக வருவாய் ஈட்ட வேண்டும்.

தமிழகத்தில் 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மண்டல இணை ஆணையர்கள் எடுக்க வேண்டும். இந்த நிலையில், ஒவ்வொரு வணிகவரித்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு தனித்தனியாக வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த இலக்கை அடைய இணை ஆணையர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் பேசியதாக வணிகவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Commissioner ,Regional Co-ordinators , Revenue, targeted, at Rs 1 lakh crore
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...