×

ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலில் தண்ணீர் கலந்து மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட்

ஆரணி: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலில் தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட செயலாளர், பிஎம்சி பொறுப்பாளர் ஆகிய 2 பேரை மாவட்ட பால்வளத் துறை இணை இயக்குநர் சந்திரசேகர் சஸ்பெண்ட் செய்தார்.  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவில் ஆரணி பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நிர்வாக குழு தலைவர் குமுதவள்ளி, துணைத்தலைவர் உட்பட 9 உறுப்பினர்கள்  உள்ளனர்.

கடந்த மாதம் 29ம் தேதி இந்த கூட்டுறவு சங்கத்தில் இருந்து டேங்கர் லாரி மூலமாக சென்னைக்கு 5,500 லிட்டர் பால் பரிசோதனை செய்ததில் பாலில் அதிகளவு தண்ணீர் கலந்து தரமற்று இருப்பது தெரியவந்தது. இவ்வாறு கடந்த 5  ஆண்டுகளில் பாலில் தண்ணீர் கலந்து விநியோகித்ததில் பல கோடி மோசடி நடந்து இருந்தது குறித்து, நேற்று தினகரனில் விரிவான செய்து வெளியானது. இதன் எதிரொலியாக வேலூர் ஆவின் துணை பொது மேலாளர் உலகநாதன், ஆரணி  பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

அப்போது பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் வரழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர், ஆய்வில் கடந்த 29ம் தேதி ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பாலில் 600 லிட்டர்  தண்ணீர் கலந்ததும், திருப்பி அனுப்பட்ட பாலை ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் ஊற்றி அழித்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தியதில்  ஆரணி பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழுத் தலைவர் குமுதவள்ளி, செயலாளர் சரவணன், பிஎம்சி பொறுப்பாளர் பழனி, இரவு காவலர் கோவிந்தசாமி ஆகிய நான்கு பேரும் கூட்டாக சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக அம்பத்தூர் ஆவின்  நிறுவனத்திற்கு அனுப்பும் பாலில் தினமும் 300 லிட்டர் தண்ணீர் கலந்து பல கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சந்திரசேகர், மோசடி செய்ய  காரணமாக இருந்த செயலாளர் சரவணன், பிஎம்சி பொறுப்பாளர் பழனி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள்  கைப்பற்றிவிசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் தண்டனை
முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழைத்து ஆவின் துணை பொது மேலாளர் உலகநாதன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பாலில் தண்ணீர் கலந்து மோசடி செய்யும் நபர்கள் மீது ஆயுள் தண்டனை  வழங்கப்படும் என உச்சநீதி மன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் இனிமேல் யாரவது பாலில் தண்ணீர் கலந்து மோசடி செய்ய நினைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags : Aryan ,Milk Producers Co-operative Society Participates in Milk Fraud , Milk producers co
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை