×

சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி நெஞ்சுவலியால் பலி முதல்வர் எடப்பாடி ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றார்: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி மாரடைப்பால் இறந்தார். அந்த விமானத்தில் சென்னையில் இருந்து கோவை செல்ல வேண்டிய முதல்வர் எடப்பாடி இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக கோவை புறப்பட்டு சென்றார். திரிபுரா மாநிலம் அகர்தலாவை சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கர் லால் (70). இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்.

இதற்காக கொல்கத்தா மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் சரியாகிவிடும் என சில மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனால் மாணிக்கர் லால் தன் குடும்பத்தினருடன் கொல்கத்தாவில் இருந்து இண்டிகோ விமானத்தில் நேற்று சென்னைக்கு வந்தனர்.

விமானம் மாலை 4 மணியளவில் சென்னையில் வழக்கமாக தரையிறங்கும். கொல்கத்தாவில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் மாலை 3.30 மணி அளவில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மாணிக்கர் லாலுக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. விமானத்திலேயே வலி தாங்க முடியாமல் துடித்தார்.

இதையடுத்து இவருடைய குடும்பத்தினர் இச்செய்தியை விமான பணிப்பெண்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் சரியாக மாலை 4 மணிக்கு தரையிறங்க அனுமதி அளித்தனர்.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும், தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி மாணிக்கர் லாலை பரிசோதித்தனர். அவர் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே கடுமையான மாரடைப்பால் இறந்து விட்டார் என மருத்துவ குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். இதனை கேள்விப் பட்ட லாலின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

உடனே அவரது உடலை விமானத்தில் இருந்து இறக்கி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விமானம் கொல்கத்தாவில் மாலை 4 மணிக்கு வந்து விட்டு மீண்டும்  மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் செல்லும்.
கோவை செல்லும் இந்த விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி கோவைக்கு புறப்பட்டு செல்ல வந்து கொண்டிருந்தார்.

ஆனால் விமான சட்ட விதிகளின் படி விமானத்திற்குள் ஒரு பயணி இறந்து விட்டால், ரசாயண கலவையை பீய்ச்சி அடித்து விமானத்தை முழுவதுமாக சுத்தம் செய்த பின்பே மீண்டும் விமானத்தை இயக்க வேண்டும். இதனால் பரபரப்பு அடைந்த விமான நிலைய அதிகாரிகள் முதல்வருடன் வரும் அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து அவரை பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறையில் தங்க செய்தனர்.

அதோடு விமான நிலைய ஊழியர்கள் அவசர, அவசரமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை சுத்தப்படுத்தி அதன் பின்பு விமானத்தில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு ஒரு மணி நேரம் தாமதமாக நேற்று மாலை 6.10 மணிக்கு விமானம் கோவைக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Edappadi ,flight ,Chennai , In Chennai, traveler, traveler, ninjuvali, the victim, the driver Edappadi, departed
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...