×

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு: நீட் தேர்வில் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

மரக்காணம்: நீட் தேர்வில் தோல்வியால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ள நிலையில், விழுப்புரத்தில் நேற்று மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (48). இவர், அமமுக கட்சியில் மரக்காணம் ஒன்றிய மீனவர் அணிச்செயலாளராக உள்ளார். இவருக்கு 3 மகள்கள். இவரது மனைவி கடந்த 6 ஆண்டுக்கு முன்  இறந்துவிட்டார். இதனால் மகள்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி மூத்த மகள் மோனிஷாவை நாமக்கல் மாவட்டம் திருச்ெசங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016ல் பிளஸ் 1ல் சேர்த்து  படிக்க வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2017) பிளஸ்-2 பொதுத்தேர்வில் மோனிஷா 690 மதிப்பெண் பெற்றுள்ளார். இதையடுத்து, மகளை டாக்டராக்க விரும்பி விழுப்புரத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு அனுப்பி உள்ளார்.

இதன்பின், இந்த ஆண்டுக்கான நீட்தேர்வை மோனிஷா புதுவையில் எழுதினார். தேர்வுக்கான முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் மோனிஷா தோல்வியடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த மோனிஷா நேற்று காலை தனது  வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இதை கண்ட மோகன் கதவை உடைத்து மகளை மீட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த  டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் மாணவி  எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், எனது சாவுக்கு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததுதான் காரணம். வேறு யாரும் காரணம் இல்லை’ குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல்  ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாளில் 3 பேர் தற்கொலை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவ, மாணவிகளுக்கு போதுமான பயிற்சி  இல்லை. பெரும்பாலும் ஏழை மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக 2017ல் அரியலூரில் அனிதா, 2018ல் விழுப்புரத்தில் பிரதிபா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இப்போது நடந்த நீட் தேர்வில்  தேர்ச்சி பெறாததால் திருப்பூரில் ரிதுஸ்ரீ, தஞ்சையில் வைஸ்யா ஆகியோர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மரக்காணத்தில் நேற்று மோனிஷா என்ற மாணவியும் உயிரிழந்திருக்கிறார். 2 நாளில் 3 மாணவிகள்  அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை உண்டாக்கி உள்ளது. இவர்களில் திருப்பூரில் ரிதுஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாணவியின்  உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags : deaths ,Tamilnadu , Student, suicide
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...