×

நீட் தேர்வு ரத்து கோரி நாடாளுமன்றத்தில் காங்., திமுக குரல் கொடுக்கும்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து தமிழக எம்பிக்களும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம் என திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள்  தலைவரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவும், பாஜகவும் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு கொண்டு வருவதற்கு காங்கிரஸ், திமுகதான் காரணம் என தொடர்ந்து  குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் அவர்களால் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு நீட் தேர்வில் சற்று அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே நீட் தேர்வை மாணவர்கள் எழுதித்தான் ஆகவேண்டும். நீட் தேர்வை புறக்கணித்தால் மாணவர்களின் எதிர் காலம் பாதிக்கப்படும். நீட் தேர்வில்  இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எங்கள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நீட் தேர்வுக்கு விதி விலக்கு அளித்தால் நல்லது. தற்கொலை  முயற்சியை மாணவ, மாணவிகள் கைவிடவேண்டும். முதலமைச்சர் தனது டிவிட்டர் பதிவை எதற்காக போட்டார். பின்னர் ஏன் நீக்கினார் என்பது பற்றி எதுவும் புரியவில்லை. எனவே அவரிடம்தான் அதற்கு விளக்கம் கேட்கவேண்டும்.  நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து தமிழக எம்பிகளும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம்.

Tags : cancellation ,DMK ,Parliament ,interview ,Thirunavukkarar , NEET Exam
× RELATED ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்...