×

யாரையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்: தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் முடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் கட்டுமான பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கி போயுள்ளது. இதனால் 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஆண்டு நிலவி  வரும் கடும் வறட்சியால் மக்கள் தண்ணீருக்காக பரிதவித்து வருகின்றனர். வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் குடங்களுடன் காத்து கிடக்கின்றனர். எனவே இந்த தண்ணீர் பஞ்சம் ஏழை, பணக்காரர் என யாரையும் விட்டு  வைக்காமல் ஒட்டு மொத்த மக்களையும் நிலைய குலையச் செய்துள்ளது. பருவமழை பொய்த்து போனதால் அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டது. இதன் எதிரொலியாக நிலத்தடி நீர்மட்டம் அதல  பாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை போட்டிப் போட்டு உறிஞ்சி வியாபாரமாக்கி வருவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தண்ணீரே இல்லாத நிலை உருவாகி வருகிறது. ஒரு லாரி தண்ணீருக்காக  மக்களின் போராட்டம் பெரிய அளவில் வெடித்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலைதான் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வருகிறது. தமிழக அரசோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காட்டிய அலட்சியம்தான் இந்த பஞ்ச நிலைக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி  வருகின்றனர். மக்களை தவியாய் தவிக்கவிட்டுள்ள இந்த தண்ணீர் பஞ்சம் ஒவ்வொரு துறைக்குள் புகுந்து காலி செய்து வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வணிக நிறுவனங்கள்,  தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள் எல்லாம் தண்ணீருக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. அதிக அளவு பணம் செலவழித்தாலும் தண்ணீர் கிடைப்பது என்பது மிகவும் அரிதாகி வருகிறது.  எனவே, இவைகள் எல்லாம் கூடிய விரைவில் மூடப்படும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகரான சென்னைதான் தண்ணீர் பஞ்சத்தின் உச்சத்தில் இருக்கிறது. இது, சென்னை மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது.  இப்படி யாரையும் விட்டு வைக்காக தண்ணீர் பஞ்சம் இப்போது தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கட்டுமான தொழிலையே முடக்கி வருவது அதிர்ச்சியை தரக்கூடியதாக உள்ளது. தமிழகம் முழுவதும் நடந்து வரும் கட்டுமான பணிக்கு  தேவையான தண்ணீர் கிடைக்காததால் வேலையை தொடர முடியாமல் கட்டுமான உரிமையாளர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வானுயர கட்டிட பணிகள் எல்லாம்  அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது.

லட்சக்கணக்கில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பணிகளை தொடருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதால் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றனர். பல நூறு அடிக்கு போர்  போட்டும் தண்ணீர் இல்லாததால் வேறு வழியில்லாமல் கட்டுமான பணியை தொடர முடியாத நிலை உள்ளது. விலை கொடுத்து தண்ணீரை வாங்கி தினமும் பணிகளை தொடர வேண்டுமானால் பட்ஜெட் எங்கேயோ போகிவிடும் என்பதால்  இந்த முடிவுக்கு கட்டுமான உரிமையாளர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுமான பணிகளில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வந்த 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் அபாய நிலையில் உள்ளனர். இவர்கள்  மாற்று வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதால் வாழ்வாதாரத்தை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தினக்கூலி அடிப்படையில் செல்லும் அவர்கள் கூலி இல்லாமல் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வதென்று  தெரியாமல் தவிக்கின்றனர். தண்ணீர் பஞ்சம், கட்டுமான பணியாளர்களை இந்த அளவுக்கு சோதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே, கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கும் வரை தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண  நிதி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, கட்டுமான உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே  கட்டுமான பணிகளுக்கான தளவாட பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த சூழ்நிலையில் இப்போது தண்ணீர் பிரச்னை எங்களை வாட்டி வதைக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கி கட்டுமான பணிகளை  தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் பூரணமாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக கட்டுமான துறைக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’’  என்றனர்.

Tags : Anyone , Water famine
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல்: நடிகர்...