திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்  காட்டுப்பாக்கத்தில் தனியார் குடிநீர் நிர்வாகம் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் நிலத்தடி நீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தேவராஜ் என்பவர் அந்தப் பகுதியில் எந்த அனுமதியும்  இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் பூந்தமல்லி தாசில்தாருக்கும் உத்தரவிடகோரி ஷீலா தேவி என்பவர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், சுப்ரமணியம் பிராசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இரவு, பகல் பாராமல் சட்டவிரோதமாக 50க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர்  எடுத்து வருகிறார்கள். இதனால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு  செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை தடுக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் தனி நீதிபதி அந்த உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சட்டவிரோதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனியாரால் தண்ணீர் உறிஞ்சப்படுவதை உடனடியாக தடுக்க திருவள்ளூர் கலெக்டர் மற்றும் பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

× RELATED வறட்சி, நிலத்தடிநீர் குறைவால் எதையும்...