×

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 2 மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.14 லட்சம்

சென்னை: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 14 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர்  எடப்பாடி வழங்கினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 14.2.2019 அன்று தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தை சேர்ந்த ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியை சேர்ந்த சி.சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை  வழங்கிட முதல்வர் 15.2.2019 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன், உயிரிழந்த ஜி.சுப்ரமணியன் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சி.சிவசந்திரன்  மனைவி காந்திமதி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 27.2.2019 அன்று வழங்கினார். தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை  போற்றும் வகையிலும், அந்த குடும்பத்தினருக்கு உதவிடும் வகையிலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், ஜி.சுப்ரமணியன் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சி.சிவசந்திரன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு தலா ரூ.14  லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். இந்த நிகழ்வின்போது, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர்  உடனிருந்தனர்.

Tags : security personnel ,militants ,Jammu & Kashmir , Jammu-Kashmir, Central Security Force
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!