மக்களவை துணை சபாநாயகர் பதவி சிவசேனா திடீர் போர்க்கொடி: தனது உரிமை என வலியுறுத்தல்

மும்பை: மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்கள் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று பாஜ.வை சிவசேனா வலியுறுத்தியுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 18 எம்.பி.க்களுடன் சிவசேனா இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. இதனால், மத்திய அமைச்சரவையில் தங்கள் கட்சிக்கு முன்பை விட கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று அந்த கட்சி எதிர்பார்த்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ சிவசேனாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரேயொரு பதவி மட்டுமே வழங்கினார்.

சிவசேனாவை சேர்ந்த அர்விந்த் சாவந்த் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கனரக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான முந்தைய அமைச்சரவையில் சிவசேனா சார்பில் அமைச்சராக இருந்த அனந்த் கீதேக்கும் கனரக தொழில்துறைதான் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதிக முக்கியத்துவம் இல்லாத இந்த இலாகா ஒதுக்கப்பட்டது சிவசேனாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரவையில் சிவசேனா மூன்று அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த கட்சிக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிவசேனா மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை சிவசேனா கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தான் எதிர்பார்க்கும் மக்களவை துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பாஜ.வை சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் மாநிலங்களை உறுப்பினருமான சஞ்சய் ராவுத் நேற்று கூறியதாவது;
மக்களவை துணை சபாநாயகர் பதவி எங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அந்த பதவியை பெறுவது எங்கள் உரிமை.

அதற்கான அதிகாரம் எங்களுக்கு உள்ளது. எங்களது இந்த உரிமை நியாயமானது என்பதால் துணை சபாநாயகர் பதவி, எங்கள் கட்சிக்கு கிடைத்ததே ஆக வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டிய தருணம் இது. இதன் பிறகும்ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் நம் மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் இழந்து விடுவார்கள் என்றார்.

Tags : deputy speaker ,Lok Sabha ,Shiv Sena , Lok Sabha, Deputy Speaker, Shiv Sena, Sudden Battle
× RELATED மாநிலங்களவையில் துணை சபாநாயகர் இன்றி நடத்தப்பட்ட 62 அமர்வுகள்