×

தெலங்கானாவில் காங்கிரஸ் கூடாரம் காலி 12 எம்எல்ஏக்கள் டிஆர்எஸ்சில் இணைந்தனர்

ஐதராபாத்: தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரில், 12 பேர், சபாநாயகர் சீனிவாஸ் ரெட்டியை நேற்று சந்தித்து காங்கிரஸ் கட்சியை, தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியுடன் (டிஆர்எஸ்) இணைக்க வேண்டும் என மனு  கொடுத்தனர். இதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், டிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில்  வென்றது. இவர்களில் 11 பேர், டிஆர்எஸ் கட்சியில் சேரப் போவதாக கடந்த மார்ச் 11ம் தேதி அறிவித்திருந்தனர். தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த உத்தம் குமார் ரெட்டி, மக்களை தேர்தலில் நலகொண்டா தொகுதியில்  போட்டியிட்டு வென்றார்.

இதனால் இவர் தனது எம்.எல்.ஏ பதவியை கடந்த புதன்கிழமை ராஜினாமா செய்தார். இதனால் 119 உறுப்பினர்கள் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 18 ஆக குறைந்தது. இந்நிலையில், தந்தூர் காங்கிரஸ்  எம்எல்ஏ ரோகித் ரெட்டி, டிஆர்எஸ் செயல் தலைவரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான ராமராவை சந்தித்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து தெலங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  கூட்டம், மூத்த தலைவர் வெங்கட ரமணா ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 12 எம்.எல்.ஏ.க்கள், மாநில வளர்ச்சிக்காக முதல்வர் சந்திரசேகர ராவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். மேலும், தங்களை டிஆர்எஸ் கட்சியில்  இணைக்கும்படி, அவர்கள் சபாநாயகர் சீனிவாஸ் ரெட்டியிடம் மனு அளித்தனர். ஒரு கட்சியில் 3ல் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள், வேறொரு கட்சியுடன் இணைய விரும்பினால், அவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  முடியாது என தெலங்கானா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதனால், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பலம் 6 ஆக குறைந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. 7 உறுப்பினர்கள்  கொண்ட அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும். இங்கு பா.ஜ.வுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருவில் இறங்கி போராடுவோம்
தெலங்கானாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைக்க விருப்பம் தெரிவித்து சபாநாயகரிடம் மனு அளித்த விவகாரம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி அதிருப்தி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: காங்கிரஸ் எம்எல்ஏக்களை சிறு சிறு பகுதிகளாக முதல்வர் சந்திரசேகர ராவ் விலைக்கு வாங்கியுள்ளார். முறைகேடாக அவர் சேர்த்துள்ள பணத்தை கொண்டு ஒப்பந்ததாரர் மூலம் இந்த  எம்எல்ஏக்களை விலைபேசியுள்ளார். இன்று காலை, முதல்வர் கேசிஆர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் இறுதி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். தேசிய கட்சியை மாநில கட்சியுடன் இணைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு  இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் இதுபோன்ற அத்துமீறலில் கேசிஆர் ஈடுபடுகிறார். கேசிஆரின் சட்டவிரோத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. அவர் பொதுமக்கள் அளித்த அதிகாரத்தை தவறாக  பயன்படுத்தியுள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்திலும் தெருவிலும் இறங்கி போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Telangana ,Congress MLAs ,TRS , Telangana, TRS
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!