×

கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் 24 மணி நேரமும் திறக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தியேட்டர்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு கடைகள், நிறுவனங்களின்  பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள் குறித்த சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இந்த புதிய சட்டத்தின்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் நிறுவனங்கள்  தினமும் 24 மணி நேரமும், வாரத்துக்கு 7 நாட்களும், ஆண்டுக்கு 365 நாட்களும் திறந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இதனை மாநிலங்கள் அவர்கள் நடைமுறை தேவைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம், அமல்படுத்தலாம் என்றும்  தெரிவித்திருந்தது.

இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வேலை முறை, சட்டமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலில் அமல்படுத்தியது. அங்கு 2018ம் ஆண்டு முதல் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்  பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து ஆண்டு முழுவதும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறப்பதற்கான பரிந்துரையை தொழிலாளர் நலத்துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரை வழங்கிருந்தார். அதன்படி பல்வேறு நிபந்தனைகளுடன்,  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்து வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று  வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் தினமும் 24 மணி நேரமும் செயல்பட 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வசதி,  விருப்பத்தை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம். இந்த அரசாணையுடன், தொழிலாளர்களின் பணி நேரம், பாதுகாப்பு ஆகியவையும் வரையறை செய்யப்பட வேண்டும். அதன்படி ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது  வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்றால் சம்பளத்துடன் கூடிய கூடுதல் பணியாக (ஓவர் டைம்) இருக்க வேண்டும். அதுவும் கூடுதல் பணியும் சேர்த்து ஒரு  நாளைக்கு 10.30 மணி நேரம் அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும்.

கூடுதல் பணிக்கான ஊதியத்தை பணியாளரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பணியில் இருக்கும் பணியாளர்கள் வேலை, ஊதியம், விடுமுறை நாள் உள்ளிட்டவை பார்வையில் படும்படி ஒட்டி வைத்திருக்க வேணடும். இரவு 8 மணிக்கு  மேல் பெண்கள் பணியாற்ற கூடாது. ஒருவேளை அதற்கான அவசியம் இருந்தால் அவர்களின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடனே பணியில் ஈடுபடுத்த வேண்டும். பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை  தகுந்த பாதுகாப்பு, கழிவறை, லாக்கர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாகன வசதி செய்து தரப்பட வேண்டும். அதுகுறித்து கடை, அலுவலக வாயிலில் அறிவிப்பு  செய்திருக்க வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த விதிகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பது அடிக்கடி ஆய்வு செய்யப்படும். அப்படி  விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடைகள், நிறுவனங்கள், தியேட்டர்கள் 24 மணி நேரமும் திறக்க அனுமதி  அளிப்பதற்கான அரசாணை வெளியிட்டாலும், இதுபற்றி அறிவிப்பு முறைப்படி தமிழக கெசட் (அரசிதழில்) விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகே இது நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலாவதியாகும் 8 மணி நேர வேலை
பெரிய நிறுவனங்கள் வருகை, தனியார் மயமாக்கலுக்கு பிறகு தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படுவதில்லை. குறைந்தது 10 மணி நேரம், 12 மணி நேரம் என்பது வாடிக்கையாகி விட்டது. இந்த  விதிமீறல்களை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இதுவரை கண்டுகொண்டதே இல்லை. தட்டிக் கேட்க வேண்டிய தொழிற்சங்கங்கள் அமைக்க நீதிமன்றமே அனுமதி மறுக்கும் நிலையில் தொழிலாளர்களின் உரிமைகள் என்பது காற்றோடு  போய்விட்டது. இந்த விதி மீறல்களை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இதுவரை கண்டு கொண்டதேயில்லை. அப்படியிருக்க புதிய சட்டம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் எழுந்துள்ளது. மாறாக  வேலை செய்யும் நேரம் குறைந்தது 12 மணி நேரமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மறுப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாகிவிடும். அதனால் இனி 8 மணி நேர வேலை என்பது சட்டத்தில் மட்டும் இருக்கும்.

இரவு சினிமா கிடையாது
பெங்களூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சம்பவத்துக்கு பிறகு செகண்ட் ஷோ எனப்படும் இரவு 10 மணி காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.  அங்கு இப்போது இரவு 7 மணிக்கு தொடங்கும் காட்சிதான் கடைசி இரவு காட்சி.

Tags : Shops ,theaters , Shops, business establishments, theaters
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி