×

மன்னார்குடியில் மண்ணில் புதைந்த அரசு மருத்துவமனையை இடிக்க நடவடிக்கை: மக்கள் செல்லாதபடி பேரிகார்டு

மன்னார்குடி: மண்ணில் அரை உள்வாங்கிய மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிக்குள் மக்கள் செல்லாதபடி பேரிகார்டு தடுப்பு போடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 200 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ேநாயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனை கட்டப்பட்டு 49 ஆண்டுகளான நிலையில் பழுதடைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் காலை மருத்துவமனையில் ஓ.பி. சீட்டு வாங்க நோயாளிகள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தின் பின்புறம் இருந்த மேற்கூரை தகரம் விழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள், ஊழியர்கள் பீதியில் அலறியடித்து வெளியே ஓடிவந்து பார்த்தபோது கட்டிடத்தின் முன் பகுதியில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டிடத்தின் ஒரு பகுதி அரை அடி ஆழம் உள்வாங்கியது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து ஊழியர்கள், நோயாளிகள் கட்டிடத்திலிருந்து வெளியேறினர்.

இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயகுமார், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி,  பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர். கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை சரியில்லாததால் கட்டிடத்தை இடிக்கக் கோரி கடந்த 15 நாட்களுக்கு முன்பே மருத்துவமனை சார்பில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் உமாவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அது பரிசீலனையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டிடம் இடிக்கப்படும்’ என்றார். மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்றதும் கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை கட்டிடத்தை சுற்றி பேரி கார்டு வைத்து மக்கள் செல்லாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : government hospital ,Mannargudi , Mannarkudi, buried in the soil, government hospital, action to demolish
× RELATED முற்றுகை போராட்டம்