×

பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் - அமைச்சர் சித்து மோதல் தீவிரம்: அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் சித்து இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் முழு வெற்றி பெறாமல் போனதற்கு, சித்து மீது குற்றம் சுமத்தியதால் இரண்டாவது முறையாக அமைச்சரவை கூட்டத்தை சித்து புறக்கணித்தார். இந்நிலையில் அவர் உள்ளாட்சி துறையிலிருந்து, மின்சாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.   பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் சித்து இடையே பல மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என சித்துவிடம், முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார். ஆனால் அதையும் மீறி அவர் அந்த விழாவில் கலந்து கொண்டு, பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவியது சர்ச்சை ஏற்படுத்தியது.   அமிர்தசரஸ் தொகுதியில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முதல்வர் அமரீந்தர் சிங் தடையாக இருந்தார் என சித்து குற்றம் சாட்டினார். மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறினர். பஞ்சாப் மக்களவை தேர்தலில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதியில் வென்றது.   முழு அளவிலான வெற்றி கிடைக்காததற்கு சித்துவின் பொறுப்பற்ற செயல்பாடுகள் தான் காரணம் என அமரீந்தர் சிங் குற்றம் சாட்டினார். உள்ளாட்சி துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றாததால், நகர்ப்புறங்களில் வெற்றி வாய்ப்பு பாதித்ததாக அமரீந்தர் சிங் கூறினார். இதனால் கடந்த மாதம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சித்து புறக்கணித்தார். நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் சித்து கலந்து கொள்ளவில்லை.  இந்நிலையில் கட்சியின் மோசமான செயல்பாடுக்கு தன்னை மட்டும் குற்றம்சாட்டுவது நியாயம் இல்லை, இதை ஏற்க முடியாது. தோல்விக்கு ஒட்டு மொத்தமாக பொறுப்பேற்க வேண்டும். எனது 40 ஆண்டு கால வாழ்க்கையில், நான் பலதுறைகளில் கடுமையாக உழைத்து பாராட்டு பெற்றவன் என கூறியுள்ள சித்து, சிலர் என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றனர் என கூறினார். இந்நிலையில் பஞ்சாப்பில் அமைச்சர்கள் சிலரது இலாக்காக்களை முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று மாற்றினார்.   தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாடு காரணமாக, அமைச்சர் சித்துவின் உள்ளாட்சி துறையை மாற்ற திட்டமிட்டிருப்பதாக அமரீந்தர் சிங் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி சித்துவிடம் இருந்த உள்ளாட்சி துறை, சுற்றுலா மற்றம் பண்பாட்டுத்துறை பறிக்கப்பட்டு மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வழங்கப்பட்டுள்ளது. இருவர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பஞ்சாப் காங்கிரஸில் விரிசலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : Amarinder ,Sidhu ,Punjab ,Ministers , Punjab, Chief Minister Amarinder, - Minister Sidhu, conflict
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து