நிதி ஆயோக் அமைப்பை மறுசீரமைக்க பிரதமர் மோடி ஒப்புதல்: துணைத் தலைவராக ராஜிவ் குமார் மீண்டும் நியமனம்

புதுடெல்லி: நிதி ஆயோக் (NITI - National Institution for Transforming India) அமைப்பை மறுசீரமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் மோடியும், கவுன்சில் உறுப்பினர்களாக அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் உள்ளனர். இந்த கவுன்சில் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி கூடியது. அதைத்தொடர்ந்து, 2015, ஜூலை 15ல் 2வது கூட்டமும், 2017 ஏப்ரல் 23ல் 3வது கூட்டமும், 2018 ஜூன் 17ல் 4வது கூட்டமும் நடந்தது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து பிரதமர் மோடி 3வது கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நிதி ஆயோக் கவுன்சிலின் 5வது நிர்வாக கவுன்சில் கூட்டம் வரும் 15ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நீர் மேலாண்மை, விவசாயம், ஜிஎஸ்டி, மாவட்டங்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். இது தவிர நக்சல்கள் அபாயமுள்ள ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களின் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்,’’ என்றனர். பிரதமராக மோடி 2வது முறையாக பதவியேற்ற பிறகு நடக்க இருக்கும், நிதி ஆயோக்கின் முதல் நிர்வாக கவுன்சில் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பை மறுசீரமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். கவுன்சிலின் துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜிவ் குமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வி.கே சரஸ்வத், நிதி ஆயோக் ரமேஷ் சந்த், டாக்டர் வி.கே. பால் உள்ளிட்டோரும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>