×

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க 22-ல் ஆலோசனை கூட்டம்: மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு

டெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜூன் 22ல் விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. ‘தேசிய கல்விக் கொள்கை’ கடந்த 1986ம் ஆண்டு  கொண்டு வரப்பட்டது. பின்னர், அது 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதுவே,  தற்போது வரை நடைமுறையில் உள்ளது. ‘புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு கடந்த  2014ம் ஆண்டே அறிவித்தது. இதற்காக, இஸ்ரோ  முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது. நீண்ட கால தாமதத்துக்குப் பின்,  அந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. அந்த புதிய வரைவு  கொள்கையை, புதிதாக பொறுப்பேற்ற மத்திய  மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். இந்த வரைவு திட்டம் குறித்து இம்மாதம் 30ம் தேதி வரை மக்கள்  தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை  தெரிவிக்கலாம் என கூறினார்.

அந்த வரைவு கொள்கையில், ‘மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய் மொழி,  ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசும்  மாநிலங்களில், ஆங்கிலத்துடன், இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை  கற்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த திட்டத்துக்கு தமிழகம் உட்பட  தென்  மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ‘இது வரைவு கொள்கைத்தான். இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்திய மொழிகளை முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கம்.  எந்த மொழியையும் திணிப்பது நோக்கம் அல்ல,’  என் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூறினர்.

இதனை தொடர்ந்து கடந்த 3-ம் தேதி தேசிய கல்வி கொள்கை வரைவு திருத்தப்பட்டு நேற்று முன்தினம் மீண்டும் வெளியிடப்பட்டது. அதில், இந்தி கட்டாயம் என்ற பிரிவு  மட்டும் நீக்கப்பட்டுள்ளது. ‘வாரிய தேர்வுகளில் ஒவ்வொரு மொழியின்  அடிப்படை புலமை சோதிக்கப்படும். அதனால், 6ம் வகுப்பு முதல் மாணவர்கள்  தங்களுக்கு விருப்பமான மொழியை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் ஆதரவுடன் தேர்வு செய்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,  மும்மொழி பிறமாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலமாக உலக மொழிகளிலேயே இருக்கக்கூடிய தமிழ் மொழியை  அங்கீகரிக்கக்க்கூடிய ஒரு விதமாக அமையும், என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தார். மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக சர்ச்சை எழுந்ததால், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி டுவிட்டரில் விடுத்த வேண்டுகோள்ளை நீக்கினார்.  

இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து வரும் 22-ம் தேதி விவாதிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில கல்வி  அமைச்சர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்  போக்ரியால் “நிஷாங்க் உள்ளிட்டோர் அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.


Tags : Consultative Meeting ,Ministry of Human Resource Development ,State Education Ministries , New Education Policy, Consultative Meeting, State Education Ministers, Ministry of HRD
× RELATED சீனாவுக்கு பருத்தி ஏற்றுமதியால் கடன்...