×

தொடர்ந்து உயிர்பலி வாங்கும் நீட் தேர்வு: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை, இரு நாட்களில் 3 பேர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்!

விழுப்புரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷா மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் கடந்த மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைந்ததற்காக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா உடலில் மண்ணென்னையை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதே காரணத்துக்காக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகத்தை உலுக்கியிருக்கும் இந்த இரண்டு சோக சம்பவங்களில் இருந்தும் மீள்வதற்குள், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்வர் மோகன்(48). இவர் அ.ம.மு.க கட்சியில் ஒன்றிய மீனவர் அணிச் செயலாளராக உள்ளார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளான மோனிஷா(18), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் 2 படித்துள்ளார். ப்ளஸ் 2 தேர்வில் 720 மதிப்பெண்கள் எடுத்த இவர் கடந்த ஒராண்டாக புதுச்சேரி உறுவையாறு பகுதியிலுள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மோனிஷா 31 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் காரணமாக நேற்று முழுவதும் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் மோனிஷா இன்று காலை தங்கைகள் வேலைக்குச் சென்ற பின்னர் தனது துப்பட்டாவை மின் விசிறியில் மாற்றி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், மோனிஷாவின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மோனிஷா, 3 பக்கம் கடிதம் எழுதி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நீட் தேர்வு காரணமாக மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விளக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மற்றும் கிராமப்புர மாணவர்களின் கல்வி மேகள்விக்குறியாகிவிட்டது என்று பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களின் நலனுக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற நீட் தேர்வால் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Tags : Tamilnadu , Neet Exam, Tamilnadu, Girls, Suicide
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு