×

சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் துப்பு கிடைத்துள்ளது..: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல்

சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிரான போராட்டம், சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி, சமூக ஆர்வலர் முகிலன் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து சென்னையில் இருந்து மதுரை செல்வதாக கூறிவிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலன், அதன் பின்னர் மாயமானார்.

அவரது செல்போன் திண்டிவனம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி-உலக்கூர் பகுதியில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மாயமான சம்பவம் குறித்த வழக்கு போலீசில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தனித்தனி குழுக்களாக ஈரோடு, நாமக்கல், சேலம், மதுரை, சென்னை, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முகிலன் மாயமாகி இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை கடந்த மார்ச் 4ம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி சார்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், முகிலன் தொடா்பான வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடா்பான விவரங்கள் வெளியிடப்படும் பட்சத்தில் விசாரணையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தற்போதைய சூழலில் விசாரணை தொடா்பான தகவல்களை பொதுவெளியில் அறிவிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிசிஐடியின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணை தொடா்பான அடுத்தக்கட்ட அறிக்கையை 3 வார காலத்தில் சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Mugilan ,High Court , Social activist, mugilan, clues, high court, cbcid, report
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது