×

வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும், புழுதி புயலும் தாக்கும் :இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி : வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் அளவு மிக கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக உக்கிர வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாநிலங்களில் கடந்த வாரம் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

ராஜஸ்தானில் கடந்த வாரம் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த நிலையில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான், ஹரியானாவில் கடும் வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சண்டிகர், பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் சுமார் 40 கிமீ வேகத்தில் புழுதிப் புயலும் அதைத் தொடர்ந்து இடியுடன் கூடிய புயல் காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே  கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். செப்டம்பர் மாதம் வரை இந்த பருவமழை நீடிக்கும். இந்நிலையில் இந்தாண்டு 8 நாட்கள் தாமதமாக பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தென்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இலங்கையில் பருவமழை தொடங்கினால் 2 நாட்களுக்குள் கேரளாவிலும் மழை தொடங்க வேண்டும். ஆனால் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பருவமழை தொடர்ந்து காலதாமதம் ஆகிவருகிறது. இருப்பினும் வரும் 8ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்க இதுபோல் காலதாமதம் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : North India ,dust storm ,Indian Meteorological Center , Indian Meteorological Center, Warning, Weill, Flood Storm
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...