கெலாட்டை நீக்கிவிட்டு பைலட்டை சி.எம் ஆக்குங்க: ராஜஸ்தான் எம்எல்ஏ தடாலடி

ஜெய்பூர்: ‘‘மக்களவை தேர்தல் தோல்விக்காக, அசோக் கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க வேண்டும்’’ என அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராஜஸ்தான் மாநிலத்தின் 25 தொகுதிகளையும் பாஜ கூட்டணி கைப்பற்றியது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த படுதோல்வியைத் தொடர்ந்து, அங்கு கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

மாநில முதல்வர் அசோக் கெலாட் அவரது மகன் வைபவ் கெலாட் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே குற்றம்சாட்டினார். ஆனால், முதல்வர் கெலாட்டோ, ராஜஸ்தானில் காங்கிரசின் தோல்விக்கு துணை முதல்வர் சச்சின் பைலட் தான் காரணம் என்றார். ஏற்கனவே, முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இருந்தே அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி இருந்தது. இது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தநிலையில், தோடாபிம் தொகுதி எம்எல்ஏவான காங்கிரசின் பிரித்விராஜ் மீனா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆட்சியில் இருக்கும் கட்சி அம்மாநிலத்தில் தோல்வி அடைந்தால் அதற்கு முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதுவே எதிர்க்கட்சியாக இருந்தால், தோல்விக்கு கட்சி தலைவர் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில், மக்களவை தேர்தல் தோல்விக்கு முதல்வர் அசோக் கெலாட்தான் பொறுப்பு. எனவே அவருக்கு பதிலாக சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்’’ என குண்டை தூக்கி போட்டுள்ளார்.

Tags : Removal ,CMAC , Gelat, removal, pilot, CMAC, Rajasthan MLA, Dagalladi, J
× RELATED பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக...