×

மும்பையில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிப்பொருட்கள் பறிமுதல்: தீவிரவாத தடுப்புப்படை தீவிர விசாரணை

மும்பை: மும்பையின் குர்லா பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை குர்லா லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சாலிமாருக்கு இயக்கப்படும் சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று குர்லாவில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த ரயில் சாலிமாருக்கு இயக்கப்படவிருந்தது. இந்த நிலையில், அந்த ரயிலில் ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையை மேற்கொண்டபோது ஒரு பெட்டியில் இருக்கைக்கு அடியில் சந்தேகமான முறையில் கிடந்த பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்தபோது 6 ஜெலட்டின் குச்சிகள், சிறிதளவு வெடிமருந்து, ஒரு பேட்டரி மற்றும் ஒரு துண்டுச்சீட்டில் எழுதப்பட்டிருந்த கடிதம் இருந்தது. அதனை கைப்பற்றிய ரயில்வே போலீசார், இதுபற்றி மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீவிரவாத தடுப்புப்படை போலீசார் விரைந்து வந்து ரயில்வே போலீசாரிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். அந்த வெடிப்பொருட்களுடன் இருந்த துண்டுச்சீட்டில் சிவப்பு நிறத்தில் ஏதோ மேப் போன்று வரையப்பட்டிருந்தது. மேலும் அந்த துண்டுச்சீட்டில், ‘‘இந்த பிளாஸ்டிக் பாக்கெட்டை இங்கே வையுங்கள், அடுத்து வரும் குழுவினர் மற்றதை பார்த்துக் கொள்வார்கள்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

வெடிப்பொருட்கள் அடங்கிய இந்த பிளாஸ்டிக் பையை ரயிலில் வைத்தது யார் என தெரியவில்லை. இதுகுறித்து தீவிரவாத தடுப்புப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஏற்கனவே மாநில உளவுத்துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Radical Prevention Actual Inquiry ,Mumbai , Explosives seized in Mumbai, workshop, parked express train
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...