×

அணு கழிவுகளை பாதுகாப்பாக சேமிக்க முடியாத நிலை கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ வேண்டுகோள்

அணு கழிவுகளை பாதுகாப்பாக சேமிக்க முடியாத நிலை கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ வேண்டுகோள்
ன்னை: அணு கழிவுகளை பாதுகாப்பாக சேமிக்க முடியாத நிலையில், கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை: அணு கழிவுகளை சேமித்து வைத்திட, அணு உலைகள் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் ஒரு இடம், அணு கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ் நில கருவூலம் ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் அணு கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய அணுமின் கழகத்திற்கு 2013ல் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் 2018 மார்ச் மாதம் முடிந்த நிலையில், தேசிய அணுமின் கழகம், ஏஎப்ஆர் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதால் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. மேலும், இதேபோன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல் முறையாக கூடங்குளத்தில் உள்ளதால், ஏஎப்ஆர் அமைப்பது மிகவும் சவாலான பணி என்றும் தேசிய அணுமின் கழகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து உலைகளுக்கு உள்ளேயே அணுக்கழிவுகளை சேகரித்து வைப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும் வரையில் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், “2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும்” என்று அணுமின் உற்பத்தி தொடர அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்துதான் தற்போது, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளாகவே ஏஎப்ஆர் பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கி, அணுக் கழிவுகளைச் சேமிக்க திட்டமிட்டுள்ள தேசிய அணுமின் கழகம், வரும் ஜூலை 10ம் தேதி நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கூடங்குள வளாகத்துக்குள்ளேயே அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே, அணுக்கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், புதிய அணு உலைகளையும் நிறுவக் கூடாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்: கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பு, அப்பகுதியின் சுற்றுச்சூழல், கடல் சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக குரல் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு உள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அப்பகுதி மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியதற்காக இரு வழக்குகளை சுமந்ததுடன், சிறைவாசமும் அனுபவித்தவன் நான். அந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் பகுதியில் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.

தற்காலிக மற்றும் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்த பிறகு, அதற்கான பணிகளை அரசு தொடங்கினால் போதுமானது. இப்பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும் வரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன்: அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான திட்டத்தைத்திய அரசு  வெளியிடும் வரை, கூடன்குளத்தில் தற்போதுள்ள இரண்டு உலைகளின் இயக்கத்தையும், புதிதாக 4 உலைகள் அமைப்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக நிறுத்தவேண்டும். தமிழ் மக்களை சோதனை எலிகளாக நினைத்து மேற்கொள்ளப்படும் இந்த பாதுகாப்பற்ற அணுக்கழிவு சேமிப்பு  நடவடிக்கையைப் பழனிச்சாமி அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் தடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 


Tags : Koodankulam ,nuclear power plants ,Vaiko , Nuclear waste, safe, save, Koodankulam reactor, permanently, close, Vaiko
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...