×

13 பேருடன் மாயமான வழக்கற்றுபோன ஏஎன்32 ரக விமானத்தை மாற்றாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘‘மாயமான ஏஎன்-32 ரக விமானம் வழக்கற்றுப் போன நிலையில் அதை மாற்றாமல் இருந்தது ஏன்?’’ என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. அசாமில் இருந்து அருணாச்சல பிரதேசம் நோக்கி கடந்த திங்கட்கிழமை புறப்பட்ட, விமானப்படையின் ஏஎன்32 ரக சரக்கு விமானம் சீன எல்லையை ஒட்டிய மென்சுகா பகுதியில் மாயமானது. புறப்பட்ட 33 நிமிடத்தில் மாயமான இந்த விமானத்தில் 13 பேர் பயணித்தனர். விமானத்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

கடந்த 2016ல்  தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து போர்ட்பிளேர் நோக்கி புறப்பட்ட இதே ரக விமானம், வங்காள விரிகுடா கடலின் மேல் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானம் என்ன ஆனது, அதில் பயணித்த 29 பேரின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2009ல் இந்தியா-உக்ரைன் ஒப்பந்தப்படி, ஏஎன்32 ரக விமானத்தை தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது ஏன் என மத்திய அரசு விளக்க வேண்டும்.

அடர்ந்த காடுகள் கொண்ட இப்பகுதியில் பறக்க நவீன விமானங்கள் நம்மிடம் இருக்கையில், ஏஎன்32 விமானம் அனுப்பப்பட்டது ஏன்? வழக்கற்று போன ஏஎன்32 விமானத்தை மாற்ற பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்காதது ஏன்? இதற்கு முன் இதே போன்ற விபத்து நடந்து விமானம் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இந்த ரக விமானத்தை மதிப்பீடு செய்ய தவறியது ஏன் என பாதுகாப்பு அமைச்சர் பதில் கூற வேண்டும்’’ என கூறினார்.

Tags : flight ,AI ,Congress , 13 namespoon, magic, AN 32 flight, why not? Congress, the question
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...